முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 913 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துகளை நிர்வகிக்க, நிர்வாகியை நியமிக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த புகழேந்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கில் ஜெயலலிதாவின் உறவினர்களாக ஜெ.தீபா, தீபக் ஆகியோர் சேர்க்கப்பட்டு அவர்களும் நேரில் ஆஜராகி நீதிமன்றத்தில் விளக்கம் அளித்திருந்தனர்.
மேலும், வரிபாக்கி 40 கோடி ரூபாய் இருப்பதாக வருமானவரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கின் வாதங்கள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை நீதிபதி கிருபாகரன், அப்துல் குத்துஸ் அமர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக ஆகஸ்ட் 30ஆம் தேதி தெரிவித்திருந்தது.
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று படத்துக்கு எதிராக வழக்கு தொடர ஜெ. தீபாவுக்கு அனுமதி!
இந்நேரத்தில், தீபா, அவரது கணவர் தீபக் தரப்பு வழக்கறிஞர்கள் நீதிபதிகள் கிருபாகரன் முன்பு இன்று ஆஜராகி, டிசம்பர் 6ஆம் தேதி ஜெயலலிதாவின் 3ஆம் ஆண்டு நினைவு தினம் வர இருப்பதால், அவர் வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்தில், அஞ்சலி செலுத்த வேண்டும். போயஸ் தோட்ட இல்லத்திற்குச் செல்ல அனுமதி மறுக்கப்படுவதால், இந்த வழக்கின் தீர்ப்பை விரைந்து வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.
அதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், விரைவில் தீர்ப்பு வழங்க இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.