ஜப்பான் கடலோரக் காவல் படை ரோந்துக் கப்பலான ’எச்சிகோ’, சென்னைக்கு இன்று வந்தது. இதற்கு இந்தியக் கடலோர காவல் படை சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சந்தன மாலை அணிவித்தும், பொட்டு வைத்தும் ஜப்பான் கடற்படை அலுவலர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பள்ளி மாணவர்களும் ஜப்பான் வீரர்களை வரவேற்றனர்.
இதைத்தொடா்ந்து, இன்று முதல் 17ஆம் தேதி வரை நடைபெற உள்ள கூட்டுப் பயிற்சியில் இந்தியா, ஜப்பான் கடலோரக் காவல் படையினா் ஈடுபட உள்ளனா். இரு நாடுகளின் கடலோரக் காவல் படையினரிடையே உள்ள பல்வேறு திறன்களை பரிமாறிக் கொள்ளவும், நல்லெண்ணப் பயணமாகவும் நடத்தப்படும் இந்தக் கூட்டுப் பயிற்சி கடந்த 18 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
2019ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற கூட்டுப் பயிற்சியில் இந்தியக் கடலோரக் காவல் படையினா் பங்கேற்றனா். இதன் தொடா்ச்சியாக இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்க ஜப்பான் கடலோரக் காவல் படையினா் ‘எச்சிகோ’ என்ற ரோந்துக் கப்பலில் வந்துள்ளனர்.
5 நாட்கள் நடக்கும் இந்தக் கூட்டு பயிற்சியில், விளையாட்டு, தொழில்நுட்பம், சமுதாய வளா்ச்சிப் பணி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் இரு நாட்டுப் படையினரும் கூட்டாகப் பங்கேற்க உள்ளனா். இதன் முக்கிய நிகழ்வாக இருநாட்டு கப்பல்கள், கடலோரக் காவல்படை வீரா்கள் பங்கேற்கும் கூட்டுப் பயிற்சி வியாழக்கிழமை சென்னைக்கு அருகே நடுக்கடலில் நடைபெற உள்ளது.
இதையும் படிங்க: அதிவேக ரோந்துக் கப்பல்கள் இந்திய கடலோர காவல் படையில் இணைப்பு