பூவிருந்தவல்லி பெரிய பள்ளி வாசலுக்குச் சொந்தமாக வீடுகள், நிலம் என சுமார் 100 கோடி வரை சொத்துகள் உள்ளன. இந்தப் பள்ளிவாசல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டது. இதில் அப்துல் ரசாக் என்பவர் தலைவராகவும் சாபி என்பவர் துணைத் தலைவராகவும் உள்ளனர். இருவரும் அதிமுக கட்சியில் உள்ளனர்.
இந்நிலையில் இந்த இருவரும் இணைந்து பள்ளி வாசலுக்குச் சொந்தமான நிலங்களை அபகரிப்பதாகவும் வீடுகள், நிலத்திற்கு வரும் வாடகைப் பணம், நன்கொடை என பல கோடி ரூபாய் பணத்தைக் கையாடல் செய்தாகக் கூறி அதே பள்ளிவாசலைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் பள்ளி வாசல் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் எதிர்தரப்பினருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு 30-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். பின்னர் இருதரப்பினர் இடையே பேசி சமாதானம் செய்துவைத்தனர். இந்தச் சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறுகையில், தலைவர், துணைத் தலைவர் ஆகிய இருவரும் ஆளும் கட்சியில் இருப்பதால் பல்வேறு முறைகேடு செய்திருப்பதாகவும் உடனடியாக அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கைவைத்தனர்