தேசிய அளவில் புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதில், மாணவர்களுக்கு மும்மொழி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், 3,5, மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் ஐந்து அல்லது எட்டாம் வகுப்பு வரை தங்களின் தாய்மொழியில் கல்வி பயில வேண்டியது அவசியம் எனவும் புதிய கொள்கையில் கூறப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 2022-23 ஆம் ஆண்டிலும்,12 வகுப்பு பொதுத்தேர்வில் 2024-25 ஆம் ஆண்டிலும் மாற்றம் கொண்டுவரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்களுக்கு ஆண்டுதோறும் முழு உடல் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்றும், மாணவர்களின் புத்தகப் பை சுமையை குறைக்கும் வகையில், பாடங்களின் சுமையையும் குறைக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
அனைத்து வகுப்புகளுக்கான ஆசிரியர்களும் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ள இக்கொள்கையில், இதற்கான பாடத்திட்டத்தை வரும் கல்வி ஆண்டில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வடிவமைத்து அளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு புதிய தேசிய வரைவு கல்வி கொள்கை மீது பல்வேறு தரப்பினரிடமும் கருத்துகளை கேட்டு, அதனை மத்திய மனிதவள மேம்பாட்டு துறைக்கு அனுப்பி வைத்தது. இதனிடையே, தமிழ்நாட்டில் ஏற்கனவே இருமொழிக் கொள்கை நடைமுறையில் இருக்கும்பொழுது, மும்மொழிக் கொள்கை போன்றவற்றை பரிந்துரைக்கும் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தக் கூடாது என பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவது குறித்து, முதலமைச்சருடன் உயர்கல்வித்துறை, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்கள் அடுத்த வாரத்தில் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்போது, தேசிய கல்விக் கொள்கையில் உள்ள சாதக பாதகங்களின் அடிப்படையில் அதனை செயல்படுத்துவது குறித்து, அரசு முடிவு எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தேசிய கல்விக் கொள்கை: 2035க்குள் சேர்க்கை விகிதத்தில் 50 விழுக்காடு இலக்கு!