IOE எனப்படும் உயர் சிறப்பு அந்தஸ்து தமிழ்நாட்டு கல்வித்துறையில் புயலைக் கிளப்பியுள்ளது. தமிழ்நாட்டு பொறியாளர்களின் முகமும் முகவரியுமாக விளங்கும் அண்ணா பல்கலைக்கழகத்தை உயர் சிறப்பு அந்தஸ்துகொண்ட நிறுவனமாக மாற்ற பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மத்திய அரசுக்கு தன்னிச்சையாக கடிதம் எழுதியுள்ளார்.
இவ்விவகாரத்தில் மாநில அரசிடம் எந்தவித ஆலோசனையும் மேற்கொள்ளாமல் தான்தோன்றித்தனமாக துணைவேந்தர் இவ்வாறு செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டி திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், தமிழ்நாட்டின் கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். மாநில அரசின் நிலைப்பாட்டை உறுதிபடுத்தும் விதமாக உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் இட ஒதுக்கீடு, நுழைவுத்தேர்வு, கட்டணம் உள்ளிட்டவற்றைக்காரணம்காட்டி இந்தச் சிறப்பு அந்தஸ்து வேண்டாம் என அரசு நினைப்பதாகக் கூறியுள்ளார்.
உயர் சிறப்பு அந்தஸ்தின் பின்புலம்:
2016ஆம் ஆண்டு மத்திய நிதி நிலை அறிக்கையில் தான் இந்த ஐ.ஓ.இ உயர் சிறப்பு அந்தஸ்து குறித்து முதன்முதலில் அறிவிப்பு வெளிவருகிறது. அதன்படி, நாட்டின் உயர் கல்வியின் தரத்தை சர்வதேச அளவில் உயர்த்தும் விதமாக கல்வி நிறுவனங்கள் உருவாக்கப்படும். அதற்காக அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் பத்தினை தேர்வு செய்ய திட்டமிட்டதாகக் கூறப்பட்டது.
பல்கலைக்கழக மானியக்குழு இதற்கான விதிமுறைகளை 2017ஆம் ஆண்டு வகுத்து, நிபுணர் குழுவையும் அமைத்தது. நாடு முழுவதும் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களின் விண்ணப்பங்களை பரிசீலித்து முதற்கட்டமாக பத்து அரசு, தனியார் நிறுவனங்களின் பெயர்கள் மத்திய கல்வி அமைச்சகத்தால் வெளியிட்டது.
அரசு கல்வி நிறுவனங்கள்:
- பனாரஸ் ஹிந்து பல்கலைக் கழகம் - உத்தரப்பிரதேசம்
- இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் - கர்நாடகா
- இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி - மகாராஷ்டிரா
- இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி - டெல்லி
- இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி - மேற்குவங்கம்
- இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி - தமிழ்நாடு
- டெல்லி பல்கலைக்கழகம் - டெல்லி
- ஹைதராபாத் பல்கலைக்கழகம்- தெலங்கானா
- அண்ணா பல்கலைக்கழகம் - தமிழ்நாடு
- ஜாதவ்பூர் பல்கலைக்கழகம்- மேற்குவங்கம்
இந்த விவகாரத்தில் தனியார் கல்வி நிறுவனங்களின் தேர்வு குறித்து எந்த சர்ச்சையும் எழப்போவது இல்லை. மேற்கண்ட பத்து அரசு கல்வி நிறுவனங்களில் முதல் எட்டு கல்வி நிறுவனங்கள் இந்த சிறப்பு அந்தஸ்துக்கு ஒப்புதல் தெரிவித்துள்ளன.
கடைசி இரண்டு பல்கலைக்கழகங்களான அண்ணா பல்கலைக்கழகம், ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் தான் ஒப்புதல் தர மறுக்கின்றன. காரணம், முதல் எட்டும் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்களாகும். எனவே, அங்கு பிரச்னை எழவில்லை. அண்ணா, ஜாதவ்பூர் பல்கலைக்கழகங்கள் நிலைப்பாட்டில்தான் கல்வித்துறையில், மாநில அரசின் உரிமை என்ற அம்சம் வெளிச்சத்திற்கு வருகிறது.
எதிர்ப்பிற்கான முக்கியக் காரணிகள்:
அண்ணா பல்கலைக்கழகம் தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனமாகும். தற்போது அதற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குகிறேன் என்ற பெயரில் தன்னாட்சி நிறுவனமாக மாற்றி, அதன் நிதி, நிர்வாக உரிமைகள் மாநில அரசிடம் இருந்து பறிபோய் விடுமோ என்ற அச்சம் அனைவரிடமும் எழுந்துள்ளது. இதுதான் முதல் காரணம்.
கல்வி நிறுவனங்களை உலகமயமாக்கல் என்பதை அடிப்படையாகக் கொண்டு, இந்த உயர் சிறப்பு அந்தஸ்து செயல்படுகிறது. இந்த அந்தஸ்து பெற்ற கல்விநிறுவனங்கள் 100இல் 30 விழுக்காடு இடத்தை சர்வதேச மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற விதி உள்ளது.
இங்குதான் இடஒதுக்கீடு அபாயம் ஏற்படுகிறது. ஏற்கெனவே மருத்துவப்படிப்பில் அகில இந்திய கோட்டா என்ற முறையில் இடஒதுக்கீடு உரிமைகள் மறுக்கப்படுவதாக பெரும்விவாதம் கிளம்பியுள்ளது. தற்போது சர்வதேச மாணவர்களுக்கு 30 விழுக்காடுபோனபின்பு, மீதமுள்ள 70 விழுக்காட்டிற்குத் தமிழ்நாட்டு மாணவர்கள் போட்டிபோட வேண்டும். மேலும், மாநில அரசு கட்டுப்பாடு நீங்கி தன்னாட்சி பெற்ற அமைப்பாக மாறிய கல்வி நிறுவனத்தில் தனித்துவத்துடன் தமிழ்நாடு பெற்ற 69 விழுக்காடு இடஒதுக்கீடு மோசம் போவதற்கு அபாயம் உள்ளதாக கல்வியாளர்கள் அஞ்சுகின்றனர். இது இரண்டாவது காரணம்.
தமிழ்நாட்டில் நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு பல ஆண்டுகளாக மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை என்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது. ஏற்கெனவே மருத்துவப் படிப்பிற்கான் சேர்கை நடைமுறையில், நீட் நுழைவுத் தேர்வு வந்து அது தமிழ்நாட்டு மாணவர்கள் வாழ்வில் களேபரம் செய்துவருகிறது. பொறியியல் படிப்பிற்கான தமிழ்நாட்டு மாணவர்களின் புகலிடமாக விளங்கும் அண்ணா பல்கலைக்கழத்தின் கட்டுப்பாடும் மாநில அரசின் பிடியிலிருந்து விலகும்பட்சத்தில், தன்னாட்சி பெற்ற கல்வி நிறுவனம் நுழைவுத் தேர்வு என்ற தளத்திற்கு செல்லாது என்பதில் நிச்சயமில்லை. எனவே, நுழைவுத் தேர்வு என்ற பூதத்தின் அச்சமும் மூன்றாவது காரணமாக உள்ளது.
கடைசியாக, சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பின் தற்போதைய தலைமுறைதான், குடும்பத்தின் முதல் பட்டதாரிகளாக உருவெடுக்கும் அந்தஸ்துக்கு வரத்தொடங்கியுள்ளனர். பல மாநிலங்கள் கல்வி சமூக குறியீடுகளில் பின்தங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் காமராஜர் போன்ற மக்கள் முதலமைச்சர்களின் முன்னெடுப்பால் கல்வித்துறையில் தற்போது ஒப்பீட்டு அளவில் மேம்பட்ட நிலையில் உள்ள மாநிலமாக விளங்குகிறது.
ஊர் முழுவதும் அரசுப் பள்ளிகள் திறந்து, மத்திய உணவு திட்டத்தை செயல்படுத்தி கல்வியை கடைக்கோடிக்கும் சென்று சேர்த்ததன் பலன்களை தமிழ்நாடு அனுபவித்து வரும் வேளையில், அரசிடம் இருக்கும் கல்வி நிறுவனம் தன்னாட்சி அமைப்பாக கைமாறுவதை கல்வியாளர்கள் ஐயத்துடன் பார்ப்பது யதார்த்தமே. சர்வதேச தரத்தில் தரம் உயர்த்தப்பட்ட கல்வி நிறுவனம் கடைக்கோடி மாணவனுக்கும் எட்டாக்கனியாக மாறும் அபாயம் ஏற்படும் என்பதே நான்காவது பெரும் அச்சமாகும்.
உயர்சிறப்பு அந்தஸ்துக்கு தேர்வு செய்யப்பட்ட மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத கல்வி நிறுவனங்களில் ஒன்று தமிழ்நாட்டிலும், மற்றொன்று மேற்கு வங்கத்திலும் உள்ளது. முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசு இதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில், தமிழ்நாடு அரசும் தற்போது எதிர்ப்பு நிலைபாட்டைதான் முன்வைத்துள்ளது.
பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் ஆளுநர், துணைவேந்தர்கள் போன்றவர்களை தங்களின் நிழல் அதிகார மையங்களாக ஏவி மாநில அரசுகளுக்கு குடைச்சல் கொடுப்பதாகப் புகார்கள் தொடர்ச்சியாக எழுந்துவருகின்றன. இந்தச் சூழலில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மாநில அரசிடம் ஆலோசிக்காமல், உயர் கல்வி அமைச்சரின் நிலைப்பாட்டிற்கு எதிராக தற்போதுவரை செயல்படுகிறார் என்பதே பலரின் குற்றச்சாட்டு. இந்தப் பின்னணியில், கல்வியிலும் அரசியலா என்ற கேள்வியை எப்படி தவிர்க்கமுடியும். ஜாதவ்பூர், அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவற்றை தன்னிச்சையான ஒன்று என்று கடந்துவிடவா முடியும் என்பதே எதிர்தரப்பினரின் கேள்வி.
இதையும் படிங்க: மாநில அரசை மீறி தன்னிச்சையாக செயல்படும் துணைவேந்தரை வெளியேற்ற வேண்டும் - வைகோ அறிக்கை