மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம் என்றார் பாரதி. சங்க காலத்திற்கு முன்பிருந்தே பெண்கள் பலர் சாதித்து வருகின்றனர். அதற்கான சான்று நாம் கண்ட பெண்பாற் புலவர்களும் ஆட்சி அமைத்த அசாத்திய பெண்களும். ஆனால் நம் சமூகத்தில் எழுந்த பிற்போக்குத்தனமான சிந்தனைகள் அவர்களின் சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இருப்பினும் ஆங்காங்கு வீறு கொண்டு எழுந்த புரட்சிப்பெண்கள் அந்த சிந்தனைகளை தகர்த்தனர்.
இருப்பினும் தற்போதைய காலகட்டத்திலும் அது தொடர்கிறது. தற்போது பெண்கள் சாதிக்கிறார்கள் என்றால் அது அவ்வளவு எளிதானது கிடையாது. "ஒரு பெண் கல்வி பெறுகிறாள் என்றாள் அது நாட்டிற்கே பெருமை" என்று பேசி பொழுதை கழித்த பலர், அவர்களை ஏசுவதிலும் முந்திக்கொள்வர். இந்த ஏசுதலுக்கும் பேசுதலுக்கும் இடம் கொடுக்காமல் தான் கொண்ட லட்சியத்தை அடைந்தவர்தான் காவல் துறை துணை தலைவர் பவானீஸ்வரி. தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் இவர் 25 வருட அனுபவம் கொண்டவர்.
மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு காவல்துறை வெளியிட்ட காணொலியில் அவர் தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அதில் பேசிய அவர், "தான் காவல்துறையில் சேர்ந்த காலகட்டத்தில் இந்தத் துறை ஆணாதிக்கம் நிறைந்த துறையாகதான் கருதப்பட்டது. ஆனால் தற்போது அப்படி நினைத்தவர்களின் விழுக்காடு குறைந்துள்ளது. எனக்கு மிகவும் துணையாக இருந்தது எனது குடும்பம்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "என்னுடைய பிரசவ காலத்தில் பேருகால விடுப்பு என்பது மூன்று மாதமாகத்தான் இருந்தது. ஆனால் தற்போது இந்த விடுமுறை ஒன்பது மாதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது காவல்துறையை தேர்ந்தெடுக்கும் பெண்களுக்கு பெரிய வரப்பிரசாதம். அதுமட்டுமல்லாமல் காவல்துறையில் தாய்மார்களுக்கு பணியில் இருக்கும்போதே குழந்தைகளை பராமரிக்கும் வசதி, பாதுகாப்பு பணிக்கு செல்லும் பெண் காவலர்களுக்கு மொபைல் டாய்லட்ஸ் போன்ற பல விதமான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், "முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா, மு.கருணாநிதி ஆகியோருடைய ஆளுமையை அருகிலிருந்து பார்க்க கூடிய வாய்ப்பும் கிடைத்தது. முதலமைச்சர் பழனிசாமியிடமிருந்து ஜனாதிபதி விருது, அத்திவரதர் சிறப்பு பணிக்கான விருது என இரண்டு விருதுகளை வாங்கியுள்ளேன். யார் ஒருவர் வாழ்க்கையில் அவமானங்களை சந்திக்க தயாராக இருக்கிறார்களோ... அவர்கள் நிச்சயமாக சாதிப்பார்கள். கடினமான வேலைகளில் மட்டும்தான் நம் திறமையை வெளிப்படுத்த முடியும்" என்று பெருமிதம் கொள்கிறார்.
இதையும் படிங்க :
'அன்புதான் அனைத்துக்குமான பதில்... அன்பே வழி...' - சாதனைப் பெண் சஞ்சனா கோயல்