சென்னை: 44ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடர், இந்தியாவில் முதல்முறையாக மாமல்லபுரத்தில் நாளை மறுநாள் (ஜூலை 28) தொடங்கி வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், 187 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இதனால் வெளிநாட்டு வீரர், வீராங்கனைகள் விமானம் வழியாக சென்னை விமான நிலையத்திற்கு வரத் தொடங்கியுள்ளனர்.
இந்தநிலையில், நேற்று (ஜூலை 25) காலையில் இருந்து நள்ளிரவு 1 மணி வரை 150 வீரர்கள், தமிழ்நாட்டிற்கு வந்தடைந்தனர். அவர்களை தமிழ்நாடு அரசு நியமித்துள்ள சிறப்பு அலுவலர்கள் மற்றும் செஸ் ஒலிம்பியாட் வரவேற்பு குழுவினர் வரவேற்று, தனி வாகனங்களில் ஏற்றி சென்னை மாநகரில் உள்ள நட்சத்திர விடுதிக்கு அழைத்துச் சென்றனர்.
அதனைத் தொடர்ந்து, இனி வருபவர்களை அரசு நியமித்துள்ள சிறப்பு பேருந்துகளை கொண்டு அவர்கள் சேர வேண்டிய இடத்தில் சேர்க்க உள்ளனர். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த செர்பிய நாட்டு செஸ் வீரர் , "நான் முதல்முறையாக இந்தியாவிற்கு செஸ் விளையாட வந்துள்ளேன்.
செஸ் ஒலிம்பியாட் போட்டி சிறந்த முறையில் நடத்த பல்வேறு ஏற்பாடுகள் செய்திருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவில் அதிக அளவிலான கிராண்ட் மாஸ்டர்கள் இருக்கிறார்கள்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆவின் பால் பாக்கெட்டில் செஸ் ஒலிம்பியாட் விளம்பரம்