திருப்பூர் மாவட்டம், பள்ளபாளையத்தில் உள்ள கருப்பராயசுவாமி கோயிலும், வடுகபாளையத்தில் உள்ள கருவந்தராய சுவாமி கோயிலும், நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. அதனடிப்படையில், இரண்டு கோயில்களையும் இடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துவருகிறது.
இதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. இதனிடையே பள்ளபாளையத்தைச் சேர்ந்த கோபிநாதன் என்பவரும், வடுகபாளையத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவரும் தனித்தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்குகள் நீதிபதிகள் ராஜா மற்றும் சவுந்தர் அமர்வில் நேற்று முன்தினம் (ஏப். 12) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், நூற்றாண்டுகள் பழமையான இந்த கோயில்கள் வருவாய்த்துறை ஆவணங்களில் இடம்பெறவில்லை. குறிப்பாக நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாற்கான எந்த ஆதாரங்களும் இல்லை. ஆகவே கோயில்களை இடிக்க தடை விதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதைக்கேட்ட நீதிபதிகள், கோயில்களை இடிக்க இடைக்கால தடை விதித்தனர். அத்துடன் இந்த மனுக்கள் குறித்து தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: 'புராதனமான கோயில்களை நவீன தொழில்நுட்பத்துடன் புதுப்பிக்கக் கூடாது'