சென்னை: தலைமை செயலக காலனி காவல் நிலையத்தில் கடந்த 19ஆம் தேதி விக்னேஷ் என்ற இளைஞர் சந்தேகமான முறையில் உயிரிழந்தார். காவல் நிலையத்தில் போலீசார் தாக்கியதால் தான் விக்னேஷ் உயிரிழந்து விட்டதாக அவரது சகோதரர் வினோத் குற்றஞ்சாட்டினார். மேலும் விக்னேஷின் மரணத்தை மறைக்க 1 லட்சம் ரூபாய் போலீசார் கொடுத்ததாக அவர் கூறியதால் சர்ச்சையானது.
இதனையடுத்து விக்னேஷை கைது செய்த உதவி ஆய்வாளர் புகழும் பெருமாள், காவலர் பவுன்ராஜ், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த தீபக் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டார். சிபிசிஐடி இந்த வழக்கின் விசாரணையை நடத்தி வருகிறது.
இந்நிலையில் சந்தேகமான முறையில் உயிரிழந்த விக்னேஷின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விக்னேஷ் உடலில் ஏற்கனவே காயங்கள் இருந்ததாக போலீசார் கூறப்பட்ட நிலையில், விக்னேஷின் உடலில் 13 காயங்கள் இருப்பதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுமட்டுமின்றி விக்னேஷின் தலையில் 1 செ.மீ அளவுக்கு ஆழமான துளை இருப்பதாகவும், ரத்தக்கட்டு, சிராய்ப்பு காயங்கள் இருப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விக்னேஷின் காலில் எழும்பு முறிவு ஏற்பட்டு கொடுங்காயம் ஏற்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. காவல் நிலையத்தில் காலையில் விக்னேஷிற்கு வலிப்பு ஏற்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது இறந்துவிட்டதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டது. இந்நிலையில் மதியம் 1.30 மணியளவில் விக்னேஷ் உயிரிழந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது. விக்னேஷின் உறுப்புகள் கெமிக்கல் ஆய்வுக்கு உட்படுத்தி இருப்பதாகவும் அந்த விவரங்கள் வந்த பிறகு இறப்பிற்கான காரணம் முழுமையாக தெரியவரும் என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விசாரணை கைதி விக்னேஷ் சந்தேக மரணம்: சிபிசிஐடி போலீசார் விசாரணை