தூத்துக்குடி: நாட்டின் 76-வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தூத்துக்குடியில் வாஞ்சி நாதன் இயக்கத்தினர் நேற்று இரவு 12 மணியளவில் வாஞ்சி நாதன் திருவுருவ படத்தை வைத்து சுதந்திர தின விழா கொண்டாடினர்.
பின்னர், இரவுப் பணியில் இருந்த காவலர்களுக்கு மூவர்ண கொடி மற்றும் இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். பின் வாஞ்சி நாதன் இயக்க தலைவர் ராம நாதன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், சுதந்திர தின விழாவை முன்னிட்டு வருடந்தோரும், காந்தி, வஉசி, பாரதி திருஉருவ படத்தின் முன்பு இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றோம்.
ஆனால், இந்த ஆண்டு சுதந்திர போராட்ட தியாகி வாஞ்சி நாதனை சுட்டுக் கொன்ற ஆங்கிலேய கலெக்டர் ஆஷ் துரைமணி மண்டபம் முன்பு கொண்டாடி வருகிறோம். இதனால், இந்தியாவை ஆக்கிரமித்து அடிமைப்படுத்தியிருந்த ஆஷ் வகையறாக்களை தோற்கடித்து வெற்றி பெற்று விட்டோம் என்ற பெருமிதத்துடன் கொண்டாடுகிறோம்.
சிற்றரசுகள், குறுநில மன்னர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி, படை பலம் கொண்டு இந்த மண்ணில் போராடினார்கள். ஆனால் அவர்களால் ஆங்கிலேயர்களை இந்த மண்ணை விட்டு அகற்ற முடியவில்லை.
ஆனால், வாஞ்சி நாதன் ஆஷ் துரையை சுட்டு கொன்ற பின் ஆங்கிலேயர்கள் அஞ்சி நடுங்கி விட்டனர். அதன் பின் தமிழர்கள் வெகுண்டெழுந்து ஆங்கிலேயருக்கு எதிராக போராடினார்கள். அதன் பலனாக ஆங்கிலேயர்கள் கடல் வழியாக ஓடினர். மன்னர்களால் சாதிக்க முடியாததை வாஞ்சி நாதன் சாதித்தார்.
இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் பகத்சிங், அதன் பின் வாஞ்சி ஆகிய இருவர் பெயர் மட்டுமே வெளிநாட்டு பத்திரிகைகளில் புகழப்பட்டவர்கள். மேலும், ஆஷ் துரை மணி மண்டபம் அருகே வாஞ்சி நாதன் மணி மண்டபம் அமைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: 75-ஆவது சுதந்திர தின விழா...தேசிய கொடியேற்றுகிறார் பிரதமர் மோடி...நேரலை