வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (29). இவர் பள்ளிகொண்டா டெல்லி பப்ளிக் பள்ளியில் தற்காலிக ஆசிரியராகப் பணிபுரிந்துவருகிறார்.
இந்த நிலையில் கடந்த மாதம் 25ஆம் தேதி வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் அரசுப்பணி தேர்வு எழுதுவதற்காக வேலூரிலிருந்து பேருந்து மூலம் கோயம்பேடு வந்துள்ளார்.
பேருந்திலிருந்து இறங்கிய மணிகண்டன் அவரின் நண்பரின் செல்போன் எண்ணுக்கு அழைத்துப் பேசிக்கொண்டே சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது பின்பக்கமாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் மணிகண்டனின் செல்போனைப் பிடுங்கி சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதையடுத்து மணிகண்டன் அவர்களைத் துரத்திச் சென்றும் பிடிக்க முடியாததால் இது குறித்து கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவியைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
அதேபோல் கடந்த 27ஆம் தேதி நந்தகோபால் என்பவர் தஞ்சாவூரிலிருந்து சென்னை வந்த அவரது மனைவியை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தபோது பூந்தமல்லி நெடுஞ்சாலை ரோகிணி திரையரங்கு எதிரில் உள்ள சிக்னலில் நின்றுகொண்டிருந்தார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் இருவரையும் கீழே தள்ளிவிட்டு கையில் வைத்திருந்த செல்போனைப் பிடுங்கிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இது குறித்தும் வழக்குப்பதிவு செய்த கோயம்பேடு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். தொடர்ந்து கோயம்பேடு பகுதியில் செல்போன் பறிப்பு, செயின் பறிப்புச் சம்பவங்கள் அரங்கேறிவருவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க: ஆசிரமம் டு உல்லாசம்: சென்னையைக் கலக்கிய கார் திருடன்!