சென்னை : சட்டப்பேரவையில் வனத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய விளவங்கோடு சட்டப்பேரவை உறுப்பினர் விஜயதாரணி “சமூக நீதி காக்கும் பண்பாளர் என முதலமைச்சருக்குப் பெயர் சூட்ட வேண்டும், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும்பாலும் வனப்பகுதி தான். 1,850 ச.கீமி பரப்பளவில் 20 லட்சம் மக்கள் வசிக்கின்ற வனப்பகுதி மிகுந்த மாவட்டமாகும்.
இங்கு வனப்பாதுகாப்பு சட்டம் தேவையில்லாதது. ஒன்றிய அரசு கொண்டு வந்த 33 சதவீத வனப்பாதுகாப்பு சட்டம், அதாவது காடுகளை உருவாக்கும் விதியை திருத்தி எழுத வேண்டும். காணி இன பழங்குடியின மக்களைப் பாதுகாத்திட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை அந்த வனப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தக்கூடாது.
இங்கு அரசு நிலம் தவிர பெரும்பாலும் வனப்பகுதி தனியார் வசமுள்ளது. அதை மீட்டெடுக்க வேண்டும். அல்பீசியா மரத்தின் ஆயுட்காலம் ஆறு மாதம் தான். ஆனால் தனியார் துறையினர் அதைப் பராமரிக்காமல் அதை வைத்து அதிக லாபம் பார்க்கின்றனர்.
அதில், அதிக அளவில் முறைகேடு நடப்பதால் தடுத்து நிறுத்த வேண்டும். ரப்பர் தோட்டத் தொழிலாளர்களின் ஊதியம் கடந்த 10 ஆண்டுகளைக் கடந்தும் தினக்கூலியாக அவர்களுக்கு 80 ரூபாய் தான் இருந்து வருகிறது. அதை உயர்த்தி வழங்கிட வேண்டும்” எனக் கோரிக்கை வைத்தார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், ”காணி இன பழங்குடியின மக்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கும். அல்பீசியா மரத்தைப் பாதுகாப்பதில் அரசு தனிக் கவனம் செலுத்தும். ரப்பர் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் குறித்து அலுவலர்களைக்கொண்டு ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க : ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் சிறு விளையாட்டு அரங்கம்