திருவண்ணாமலை மாவட்டம் இருங்கல் கிராமத்தைச் சேர்ந்த முனிகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், ”ஊரடங்கு உத்தரவை இரண்டாவது முறையாக நீட்டித்துள்ள மத்திய, மாநில அரசுகள், கரோனா தொற்று பரிசோதனைகளை விரிவுபடுத்தவோ, விரைவுபடுத்தவோ இல்லை. குறிப்பாக கரோனா தொற்றை விரைந்து கண்டுபிடிக்கக் கூடிய ரேப்பிட் டெஸ்ட் கருவிகளை முதலில் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை.
கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி சுகாதாரத்துறை கணக்கின்படி 48 ஆயிரத்து 440 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக கூறப்படும் நிலையில், 12 ஆயிரத்து 746 பேரிடம் மட்டுமே பரிசோதனை நடத்தப்பட்டதாகவும், தனிமைப்படுத்தப்பட்டவர்களிடம் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் கரோனா பரிசோதனை செய்யப்படவில்லை.
இதன் காரணமாக, நாளுக்கு நாள் கரோனா தொற்று உள்ளவர்கள் அதிகரிக்கும் நிலையில் இருக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டு கரோனா தொற்று உள்ளவர்களிடம் தொடர்புடையவர்களுக்கும் கரோனா பரிசோதனையை விரைவுபடுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் அனிதா சுமந்த் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் நாள் ஒன்றுக்கு 10,000 வீதம் பரிசோதனைகள் நடைபெறுவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். அதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், போதுமான அளவில் பரிசோதனைகள் நடைபெறுவதை ஏற்றுக்கொண்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: மத்தியக் குழு மருத்துவர்களுடன் அமைச்சர் விஜய பாஸ்கர் ஆலோசனை!