சென்னை: நேஷனல் ஹெரால்டு வழக்கில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை விசாரணைக்கு அழைத்ததைக் கண்டித்தும், அமலாக்கத்துறைக்கு எதிராக டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மீது காவல் துறையினர் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்தும், சென்னை சின்னமலையில் உள்ள ராஜிவ் காந்தி சிலை அருகே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில், நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது மேடையில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், " மூன்று நாட்களாக அடக்குமுறை நடைபெற்று வருகிறது. விசாரணை என்ற பெயரில் ராகுல்காந்தியை அலைக்கழிக்கின்றனர். அவரை பயம் காட்டுவதற்காக இந்த விசாரணையை நடத்துகிறார்கள்.
பாஜக செய்தி தொடர்பாளர் நபிகள் நாயகத்தை குறித்து தவறாகப் பேசியுள்ளார். பல்வேறு இஸ்லாமிய நாடுகள் இதற்கு கண்டனம் தெரிவித்தன. அதை மறைப்பதற்காகவே இந்த அமலாக்கத்துறை விசாரணை நடத்தப்படுகிறது. காங்கிரஸ் தலைமை அலுவலகத்தின் உள்ளே செல்ல அனுமதித்தது யார்? அது எங்களுக்கு கோயில்.
நாட்டுக்கு விடுதலை பெற்றுத் தந்த கட்சியின் தலைமை இடம் அது. நாங்கள் வாங்கித் தந்த ஜனநாயகம், சுதந்திரத்தால்தான் மோடி பிரதமராகி ஆட்டம் போட முடிகிறது. வருகின்ற தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்றுதான், இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது மோடி அரசு.
தொடந்து இதுபோன்ற அடக்குமுறையில் ஈடுபட்டால் கொடி பிடிக்கும் கையில் ஆயுதம் பிடிக்கவும் எங்களுக்குத் தெரியும். காங்கிரஸ் கட்சி காந்தியின் வழியில் அகிம்சை கட்சி தான், ஆனால் சுபாஷ் சந்திரபோஸ் கூட எங்கள் தலைவர் தான். வருகின்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற முடியாத அளவிற்கு நாம் போராடவேண்டும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: நடிகர் விஜய்யின் அலுவலகத்தில் வேலை பார்த்த நபர் மர்ம முறையில் உயிரிழப்பு..!