நடிகர் தனுஷ் நடித்த தேவதையை கண்டேன் படத்தில் காதலித்து ஏமாற்றிய காதலி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடிபோதையில் மாடியில் இருந்து குதிப்பதாக ரகளை செய்யும் தனுஷை காவல்துறையினர் படத்தில் விசாரிப்பது போன்று, மதுரவாயலிலும் ஒரு நிஜ சம்பவம் நடந்துள்ளது.
சென்னையை அடுத்த மதுரவாயல், மேட்டுக்குப்பத்தைச் சேர்ந்தவர் விக்கி (21). மெக்கானிக்கான இவர் நேற்று இரவு காவல் நிலையத்திற்கு போதையில் வந்து, தன்னை பெண் ஒருவர் காதலித்து ஏமாற்றிவிட்டதாகவும், அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மேலும் அவருக்கு செலவு செய்த மூவாயிரம் ரூபாயை திரும்ப பெற்று தருமாறும் கூறியுள்ளார்.
காவலர்களோ, அவர் எதோ குடிபோதையில் உளறுவதாக நினைத்து கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தனது பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த பிளேடால் சரசரவென தன் கையை அறுத்துக்கொண்டு ரத்தம் சொட்டச்சொட்ட பூந்தமல்லி நெடுஞ்சாலையின் நடுவே நின்று தற்கொலை முயற்சியில் ஈடுபட முயன்றுள்ளார்.
இதையடுத்து அங்கிருந்த காவலர்கள் அந்த இளைஞரை அழைத்து வந்து சமாதானம் பேசினர். அதை ஏற்றுக்கொள்ளாத அவர் இங்கிருந்தால் தனக்கு நியாயம் கிடைக்காது என்றும், அதனால் காதலியின் வீட்டின் முன்பு தகராறு செய்தால் நிச்சயமாக காவல்துறையினர் வழக்கு பதிந்து முறையாக விசாரிப்பார்கள், என்றும் கூறி அங்கிருந்து கிளம்பி சென்றார். இதனால் காவல்நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.