கவியரசர் பிறந்த தினம்
'கவியரசர்' என்று போற்றப்படும் கண்ணதாசனின் பிறந்ததினம் இன்று. 4000 கவிதைகள், 5000-க்கும் அதிகமான திரைப்பட பாடல்கள், தமிழ்நாடு அரசின் அரசவைக் கவிஞர் என்ற கௌரவம், சாகித்ய அகாடமி விருது வென்ற படைப்பாளி என எண்ணற்ற சாதனைகளோடு இன்றும் தனது பாடல் வரிகளால் தமிழ் ரசிகர்களின் நெஞ்சத்தில் வாழ்ந்து வருகிறார், கண்ணதாசன்.
மெல்லிசை மன்னர் பிறந்த தினம்:
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் பிறந்ததினம் இன்று. தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் 1700-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார், எம்.எஸ். விஸ்வநாதன்.
முதலாவது கூட்டத்தொடரின் கடைசி நாள்:
தமிழ்நாடு 16ஆவது சட்டப்பேரவையின் முதலாவது கூட்டத்தொடர், நான்காவது நாளாக இன்று நடைபெறுகிறது. ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றுகிறார்.
காஷ்மீர் விவகாரம் - பிரதமர் ஆலோசனை:
பிரதமர் மோடி தலைமையில் ஜம்மு காஷ்மீர் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இன்று ஆலோசனையில் ஈடுபடவுள்ளனர். டெல்லியில் நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க ஜம்மு காஷ்மீர் அரசியல் கட்சித் தலைவர்கள் 14 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அவதூறு வழக்கில் ஆஜராகும் ராகுல்;
2019 மக்களவைத்தேர்தலின்போது கர்நாடக மாநிலம், கோலாரில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து ராகுல் பேசினார். இந்த விமர்சனம் சாதி ரீதியாக இருப்பதாகக் கூறி, குஜராத்தைச் சேர்ந்த பர்னேஷ் மோடி என்பவர் அவதூறு வழக்குத் தாக்கல் செய்தார்.
அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று குஜராத் மாநிலம், சூரத் நீதிமன்றத்தில் ஆஜராகிறார்.
ஓடிடியில் மாடத்தி:
லீனா மணிமேகலை இயக்கத்தில் அஜ்மினா காசிம், செம்மலர் அன்னம் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள 'மாடத்தி' படம் இன்று ஓடிடியில் வெளியாகிறது. இப்படத்துக்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். பாலின பேதம், சாதி - மத நம்பிக்கை, அதிகார அமைப்பின் வன்முறைகளுக்கு எதிராக இப்படம் பேசுவதாகக் கூறப்படுகிறது.
விவோவின் புதிய மாடல்:
விவோ நிறுவனம் தனது புதிய விவோ வி21இ 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை இன்று அறிமுகம் செய்கிறது. அசத்தலான அம்சங்களுடன் கூடிய இந்த ஸ்மார்ட்போன் 24 ஆயிரத்து 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.