சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்கும் குடிநீர் உற்பத்தி ஆலைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி சிவமுத்து என்பவர் வழக்குத் தாக்கல்செய்தார். இதை விசாரித்த உயர் நீதிமன்றம், சட்டவிரோத நிலத்தடி நீரை உறிஞ்சும் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து, அறிக்கை தாக்கல்செய்யாவிட்டால், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு பெருந்தொகை அபராதமாக விதிக்கப்படும் என எச்சரித்திருந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ்குமார் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மாவட்ட வாரியாக அமைந்துள்ள குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் குறித்த பட்டியலை அரசு தாக்கல்செய்தது. அதில், உரிமம் பெறாமல் செயல்படக்கூடிய 1032 ஆலைகளை மூட நடவடிக்கை எடுக்கும்படி பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு பரிந்துரை அனுப்பியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை அர்த்தமற்றது என அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், உத்தரவுகள் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை எனச் சாடினர். நிலத்தடி நீரை எடுக்கும் ஆலைகளுக்கு உரிமம் வழங்க வகைசெய்யும் அரசாணையை உறுதிசெய்து 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுப்பவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தார்.
ஆனால், இந்த உத்தரவு முழுமையாக அமல்படுத்தப்படவில்லை என்று சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அனுமதியின்றி செயல்படக்கூடிய குடிநீர் ஆலைகளை மூட பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தியது குறித்து மார்ச் 3ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல்செய்யாவிட்டால் மாவட்ட ஆட்சியர்கள் முன்னிலையாக உத்தரவிட நேரிடும் எனத் தெரிவித்தனர்.
மேலும், இந்தியாவின் முக்கிய வளமான தண்ணீரை, உரிய அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக உறிஞ்சி வணிக நோக்கத்தில் பயன்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், குடிநீர் ஆலைகள் மூடப்பட்டது குறித்து புகைப்பட ஆதாரங்களுடன் மாவட்ட ஆட்சியர்கள் அறிக்கை தாக்கல்செய்ய வேண்டும் எனவும் கூறினர்.
நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த ஆட்சியர்கள் தவறினால், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலரை நேரில் முன்னிலையாகும்படி உத்தரவிட நேரிடும் எனவும் நீதிபதிகள் எச்சரித்தனர்.
இதையும் படிங்க: ’தேர்வு முறைகேட்டை விசாரிக்க மாநிலக் காவல் துறைக்கு அனுமதி இல்லை’ - திமுக வாதம்