தமிழ்நாட்டில் பெரும்பாலானவர்களின் இரவு, பகல் என இரு பொழுதுகளின் வெற்றிடங்களையும் நிரப்புவது இசைஞானி இளையராஜாவின் இசை என்றே சொல்லலாம். தமிழ்நாடு மட்டுமல்லாது கண்டம்விட்டு கண்டம் கடந்தும் கூட இவரின் இசைக்கு மயங்கா செவிகள் கிடையாது.
உலகளவில் தன் இசையை விதைத்த இளையராஜாவின் 77ஆவது பிறந்தநாள் நேற்று. இந்நிலையில், அவர் தன்னுடைய ரசிகர்களுக்காக காணொலி ஒன்றை வெளிட்டுள்ளார்.
அந்தக் காணொலியில், "பிறந்தநாள் வாழ்த்துகள் சொல்ல துடிதுடித்துக் கொண்டிருக்கும் அன்பு உள்ளங்களே, உங்களையும் என்னையும் சந்திக்கவிடாமல் இந்தக் கரோனா காலகட்டம் தடுக்கிறது. உங்களுடன் இசை வடிவில் நான் தினமும் வந்து கொண்டிருக்கிறேன் என்பது நன்றாக தெரியும். வெறும் இசை மட்டும் வந்தால் போதுமா, நான் வரவேண்டாமா? உங்கள் இல்லம் தேடி நானே நேரடியாக வருகிறேன் இந்த இசை OTT மூலமாக..." என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "இந்த இசை OTT வழியாக என்னுடைய அனுபவங்களையும், ஒவ்வொரு பாடலும் அமைந்த விதத்தையும் பகிரவுள்ளேன். பல இசை கலைஞர்கள் என்னுடன் இருந்த அனுபவங்களை பகிரவுள்ளார்கள். இதெல்லாம் OTT மூலமாக உங்கள் வீடு தேடி வருகிறது. அந்த நாளுக்காக காத்திருங்கள்" என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: இளையராஜாவுக்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறது இயற்கை....