சென்னையை அடுத்துள்ள தரமணி வளாகத்தில் தேசிய ஆடை வடிவமைப்பு நிறுவனத்தின் எட்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் கலந்து கொண்டு 250 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள், பரிசுகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘நீலகிரியில் பெய்த கன மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து கணக்கெடுப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடிவுற்ற உடன் நிவாரணங்கள் குறித்து அறிவிக்கப்படும். இதனைத் தொடர்ந்து, பள்ளிகளில் மாணவர்கள் கைகளில் சாதி அடையாளத்தைக் குறிக்கும் வகையிலான கயிறுகள் கட்டுவது குறித்து முதலமைச்சர் உறுதியான முடிவு எடுப்பார். அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு காக்கி நிற கால் சட்டை, வெள்ளை நிற சட்டைகளை அணிந்து வந்தனர். ஆனால் தற்பொழுது ஆடைகள் மாற்றம் செய்யப்பட்டு தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக அளிக்கப்பட்டுள்ளது’ என்று கூறினார்.
மேலும், காஷ்மீர் விவகாரத்தில் ரஜினியின் நிலைப்பாடு குறித்து அவர் கூறுகையில், அரசியலில் உள்ளவர்களின் கருத்துகளுக்கு பதில் கூறுவேன் என்றும், அரசியலுக்கு வருவேன் வருவேன் எனக் கூறும் ரஜினியின் கருத்திற்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என விமர்சித்தார்.