ஆசியாவிலேயே பெரிய தொழிற்பேட்டை அம்பத்தூர் தொழிற்பேட்டை. இங்குச் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் என சுமார் 3000-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கிவருகின்றன. இந்தத் தொழிற்சாலைகளில் லட்சக்கணக்கானோர் பணியாற்றிவருகின்றனர்.
இந்நிலையில் சென்னை, அதன் புறநகர்ப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை கொட்டித் தீர்த்ததால் பல்வேறு இடங்களில் வெள்ளக்காடாகக் காட்சி அளிக்கின்றது.
குறிப்பாக அம்பத்தூர் சிட்கோ வடக்குப் பகுதியில் உள்ள கே.கே.ஆர். மெட்டல் காம்போன்ஸ் (KKR METAL COMPONES) என 500-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் வெள்ள நீர் இடுப்பு அளவிற்குத் தேங்கியுள்ளது. அந்தப் பகுதியில் சாலைப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
பல நூறு கோடி இழப்பு
தொழிலாளர்களின் பாதுகாப்பு கருதி இரண்டு நாள்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் நிறுவனங்கள் தற்போது இயங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆகையால் பல நூறு கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாகத் தொழில் நிறுவனத்தினர் வேதனை தெரிவிக்கின்றனர்.
தொடர்ந்து இந்தப் பகுதியில் கட்டமைப்பு வசதி இல்லாததால், ஆண்டுதோறும் மழைக் காலங்களில் நீரை வெளியேற்ற முடியவில்லை.
கேள்விக்குறியான தொழிலாளர்களின் வாழ்வாதாரம்
மேலும், மழை நீர் தேங்கி இருப்பதால் தொழில் நிறுவனங்கள் இயங்க முடியாமல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது மோட்டார் பம்ப் மூலம் நீரை வெளியேற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுவருகிறார்கள். எனினும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் துரிதமாகச் செயல்பட்டு மழைநீரை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனத் தொழில் நிறுவனத்தினர் கோரிக்கைவிடுத்திருக்கிறார்கள்.
இதையும் படிங்க: Sexual harassment case: பாதிக்கப்பட்ட பெண் எஸ்பி விழுப்புரம் நீதிமன்றத்தில் இரண்டாவது நாளாக சாட்சியம்