கரோனா வைரஸ் பாதிப்பினால் உலகம் முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி போயுள்ளது. மாணவர்களின் கல்வி கற்பதிலும் பல்வேறு சிரமங்கள் உள்ளன. மாணவர்கள் கல்லூரி படிப்பை முடித்தவுடன் வேலைவாய்ப்பிற்காக நடத்தப்படும் முகாம்களும் பல மாற்றங்கள் உடனடியாக இந்தாண்டு தொடங்கியுள்ளது.
கல்லூரி படிப்பை முடித்தவுடன் பெற்றோர்களின் சுமையில் தானும் பங்கேற்கலாம் என நினைத்த மாணவர்களின் கனவை நிறைவேற்ற பல சவால்களை கண்முன்னே நிற்கின்றன. பல்வேறு சூழ்நிலையிலும் எதிர்நீச்சல் போட்ட மாணவர்கள் கரோனா காலத்திலும் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற வழியை கூறுகிறார் அண்ணா பல்கலைக்கழகத்தின் தொழிற்கூடங்கள் ஒருங்கிணைப்பு மையத்தின் துணை இயக்குநர் உதயகுமார்.
இது குறித்து ஈடிவி பாரத்திற்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் தொழிற்கூடங்கள் ஒருங்கிணைப்பு மையத்தின் துணை இயக்குநர் உதயகுமார் அளித்த சிறப்பு பேட்டியில், அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் கடந்த ஆண்டு படித்த 1800 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு தொழிற்கூடங்கள் ஒருங்கிணைப்பு துறையின் மூலம் பெற்றுத் தரப்பட்டது. இந்தாண்டும் அதற்கு குறையாமல் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.
கரோனா வைரஸ் தாக்கம் ஒருபுறம் இருந்தாலும், மறுபுறத்தில் தொழில்நுட்பங்களின் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக தகவல் தொழில்நுட்பத்தின் தேவை அதிகரித்துள்ளது. பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுப்பது போன்றவற்றால் அலைக்கற்றை மற்றும் மென்பொருள் ஆகியவற்றின் மூலம் செயல்படும் தகவல் தொழில்நுட்பத்தின் தேவை அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டு மாணவர்களுக்கான வளாக தேர்விற்கு அதிக அளவிலான தொழில் நிறுவனங்களை அழைத்துள்ளோம். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மட்டுமல்லாமல் பிற துறையை சார்ந்த நிறுவனங்களையும் வளாக நேர்காணலுக்கு அழைத்து உள்ளோம். வேலை வாய்ப்புகள் என்பது அந்த தொழில் நிறுவனங்களின் வியாபாரத்தை பொருத்து மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.
தமிழ்நாடு அளவிலான வேலைவாய்ப்பு முகாம் அண்ணா பல்கலைக்கழகத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது. அதில் குறிப்பாக தொழில்நுட்ப சேவை சார்ந்த நிறுவனங்கள் அதிக அளவில் பங்கு பெறுகின்றன. கடந்தாண்டு நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 2500க்கும் மேற்பட்ட மாணவர்கள் வளாக நேர்காணல் மூலம் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
தமிழ்நாடு அளவிலான வேலைவாய்ப்பு முகாம் மண்டல வாரியாக நடைபெறும். அண்ணா பல்கலைக்கழக துறைசார்ந்த மாணவர்களுக்கு செப்டம்பர் இறுதியிலோ அல்லது அக்டோபர் முதல் வாரத்திலோ தகவல் தொழில்நுட்ப சேவைச் சார்ந்த நிறுவனங்களில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும். அதில் இவர்களுக்கு பணிகள் வழங்கப்படும்.
தமிழ்நாடு அளவிலான வேலைவாய்ப்பு முகாம் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்ற கல்லூரிகளுக்கு டிசம்பர் மாதம் நடத்தப்படும். அதில் மேலும் பல புதிய தொழில் நிறுவனங்கள் கலந்து கொள்ள ஆர்வமாக உள்ளனர்.
இந்த கல்வி ஆண்டு ஒரு சவாலான கல்வி ஆண்டாக அமைந்து உள்ளது. மாணவர்களுக்கான வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது. எனவே அவர்கள் துறைசார்ந்த தொழில்நுட்பத்தை கற்றுக்கொண்டால் வாய்ப்புகள் அதிகளவில் இருக்கிறது. அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்ற கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு அதிக அளவில் இருக்கிறது. ஆனால் அவர்கள் அதற்கான திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் வேலைவாய்ப்புத் துறையின் இணையதளத்தில் திறன்களை வளர்த்துக் கொள்வதற்கான வழிகாட்டுதல்கள் அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் சுய பயிற்சி மேற்கொண்டு இந்த சூழ்நிலையில் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.