வழக்கமான ஜனவரி மாதத்தில் தொடர்ந்து பல நாள்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிப்பது வாடிக்கை. இருப்பினும், இந்தாண்டு பொங்கல் விழா, குடியரசு தினம் ஆகியவற்றுடன் சேர்த்து 11 நாள்கள் தமிழ்நாட்டில் உள்ள பொதுத்துறை, தனியார் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படவுள்ளது.
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள 2021ஆம் ஆண்டுக்கான விடுமுறை அட்டவணையின்படி, சென்னை மண்டலத்தில், புத்தாண்டை முன்னிட்டு ஜனவரி 1, 2 ஆகிய தேதிகளில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 3ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு வங்கிகள் மூடப்பட்டிருக்கும். விவேகானந்தர் பிறந்த நாளை முன்னிட்டு 12ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படும். தமிழ்நாட்டில் விமரிசையாகப் பொங்கல் விழா கொண்டாடப்படுவதாலும், ஆந்திரப்பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் சங்கராந்தி பண்டிகை கொண்டாடப்படுவதாலும் 14ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து 17ஆம் தேதி வாரத்தின் இரண்டாவது சனிக்கிழமை என்பதாலும், 18ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் வங்கிகளுக்கு வழக்கமான விடுமுறை. சீக்கிய குரு கோவிந்த் சிங் பிறந்தநாளை முன்னிட்டு 20ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வாரத்தின் நான்காவது சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமையையொட்டி 23, 24 ஆகிய இரு தேதிகளிலும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
ஜனவரி 25ஆம் தேதி மணிப்பூர் மக்களின் விழாவான இமோனி இரைட்பா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு 25ஆம் தேதி விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அன்றைய தினமும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். 26ஆம் தேதி குடியரசு தினம் என்பதாலும், ஜனவரி 31ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இதனால் ஜனவரி மாதத்தில் மட்டும் 16 நாள்கள் வங்கிகள் செயல்படமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இது குறித்துப் வங்கி அலுவலர்கள் கூறுகையில், “பல்வேறு வட இந்திய பண்டிகைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள விடுமுறைகள் தமிழ்நாட்டில் பின்பற்றப்படாது. தமிழ்நாட்டில் வரும் 14ஆம் தேதிமுதல் ஜனவரி 16 வரை 3 நாள்களும், 26 ஆம் தேதி மட்டும் விடுமுறை தினங்களாக இருக்கும்.
இது தவிர இரண்டாவது, நான்காவது சனிக்கிழமைகளிலும், ஞாயிற்றுக்கிழமை சேர்த்து 5 நாள்கள் வங்கிகள் செயல்படாது. மொத்தமாக 11 நாள்கள் பொதுத்துறை, தனியார் வங்கிகள் செயல்படாது. இவை வழக்கமான விடுமுறை தினங்கள்தான்.
வார இறுதி நாள்களில் வழக்கமாக வழங்கப்படும் விடுமுறை இவை. சமூக வலைதளங்களில் இதனை வைத்து பல்வேறு வதந்திகள் பரப்பப்படுகின்றன. அதனை மக்கள் நம்ப வேண்டாம்” எனக் கேட்டுக்கொண்டனர்.
இதையும் படிங்க : 3ஆவது முறை ஆட்சியே இலக்கு: ராமநாதபுரத்தில் எடப்பாடி...!