எம்.டெக்., பயோடெக்னாலஜி, எம்.டெக்., கம்ப்யூட்டேஷனல் டெக்னாலஜி ஆகிய இரு பட்ட மேற்படிப்புகளுக்கும், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை இல்லை என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்தியாவிலேயே முதன் முதலில் உயிரி தொழில்நுட்பவியல் துறை அண்ணா பல்கலைக்கழகத்தில்தான் தொடங்கப்பட்டது. தற்போது 45 மாணவர்கள் வரை படிக்குமளவிற்கு இத்துறை இயங்கி வருகிறது.
இப்படிப்புகளுக்கு அகில இந்தியத் தேர்வு மூலம், மாணவர் சேர்க்கையை, இந்த முறை அண்ணா பல்கலைக்கழகமே நடத்தும் பொறுப்பை ஏற்றுக் கொண்டது. ஆனால், மத்திய அரசின் இடஒதுக்கீட்டுக் கொள்கையை ஏற்க முடியாது என்பதால் மாநில அரசு இதற்கு அனுமதி மறுத்துள்ளது. எனவே, 2020-21ஆம் ஆண்டில் மேற்கண்ட இரு எம்.டெக்., பட்ட மேற்படிப்புகளுக்கும், மாணவர் சேர்க்கை கிடையாது என்று அண்ணா பல்கலைக்கழகம் கூறியுள்ளது.
இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று, குழலி என்ற மாணவி சார்பில் நீதிபதி புகழேந்தி முன்பு முறையீடு செய்யப்பட்டது. எம்.டெக்., படிப்புகளுக்கு தமிழக இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்று கோரியுள்ள மாணவி தரப்பு, இதனை அவசர வழக்காக விசாரிக்கவும் கேட்டுக் கொண்டது. இதையடுத்து, வழக்கை நாளை விசாரிப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மருத்துவக் கல்லூரி கட்டணத்தை குறைக்காவிட்டால் போராட்டம் தொடரும்: சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம்