சென்னை: மும்பையில் இருந்து 132 பயணிகளுடன் நள்ளிரவு 12.05 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை வந்தது. பின்னர் மழையின் காரணமாக சென்னையில் தரையிறங்க முடியாமல் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது.
அதேபோல் புவனேஸ்வரில் இருந்து நள்ளிரவு 12.15 மணிக்கு 117 பயணிகளுடன் சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், நள்ளிரவு 12.25 மணிக்கு ஹைதராபாத்தில் இருந்து 98 பயணிகளுடன் சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், ஆகிய இரு விமானங்களும் சென்னையில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானிலே வட்டமடித்துக் கொண்டிருந்தன. அதன் பின்பு இன்று அதிகாலை 1.30 மணி அளவில் சென்னையில் தரையிறங்கின.
மேலும், மழையால் சென்னையில் இருந்து புறப்படக்கூடிய விமானங்களும் தாமதமாக புறப்பட்டன. நள்ளிரவு 12.35 மணிக்கு இலங்கையின் கொழும்பு நகர் செல்ல வேண்டிய ஏா்இந்தியா விமானம், நள்ளிரவு 12.50 மணிக்கு இலங்கை செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், அதிகாலை 1.10 தாய்லாந்து தலைநகர் பேங்காக் செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ஆகிய 3 விமானங்கள் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றன.
அதிகாலை 2.30 மணிக்கு மேல் மழை ஓய்ந்ததும் விமான சேவைகள் வழக்கம் போல் இயங்கின. பெங்களூருக்கு திரும்பி சென்ற விமானமும்,மீண்டும் சென்னைக்கு திரும்பி வந்தது. நள்ளிரவில் பெய்த பலத்த மழையால், விமான சேவைகள் பாதிக்கப்பட்டு பயணிகள் அவதியடைந்தனா்.
இதையும் படிங்க: சக பயணிகளுக்கு தொல்லை கொடுத்தால் இனி இதுதான் நடவடிக்கை.. தமிழ்நாடு அரசு அதிரடி