சென்னை: புறநகர் பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் சென்னையில் உள்ள மெட்ரோ ஏரிகளுக்கு நீர் வரத்து 2 டிஎம்சி யை தாண்டியுள்ளதால் அனைத்து ஏரிகளிலும் உபரி நீர் தொடர்ந்து திறந்து விடப்படுவதாக பொதுப்பணித்துறை அலுவலர்கள் கூறியுள்ளனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில் சென்னைக்கு குடிநீர் “வழங்கும் அனைத்து ஏரிகளும் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளன. வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பே திருவள்ளூர் மாவட்டத்திலும், நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கன மழை பெய்து வந்தது.
இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய பின்பும் மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிகளுக்கு நீர் வரத்து தொடர்ந்து வருகிறது. எனவே ஏரிகளின் நீர் இருப்பு அதிகரித்து வருவதால் உபரி நீர் தொடர்ந்து வெளியேற்றப்படுகிறது," என்று தெரிவித்தனர்.
உபரி நீர் வெளியேற்றம்
வடகிழக்கு பருவமழை நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நல்ல மழையை கொடுத்தால் ஏரிகளில் வெகு விரைவாக நிரம்ப அதிக வாய்ப்புள்ளது. எனவே அனைத்து ஏரிகளிலும் நீர் திறக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என கூறிய அதிகாரிகள், இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்படவும் அபாயம் உள்ளது. இதனால் உபரி நீரை தொடர்ந்து வெளியேற்றி வருகிறோம் என தெரிவித்தனர்.
தற்போதைய நிலவரப்படி பூண்டி நீர் தேக்கத்திலிருந்து 1 டிஎம்சி க்கு மேல் தண்ணீர் கொசஸ்தலையாருக்கு திறந்து விடப்படுகிறது. இதே போல செம்பரம்பாக்கம், ரெட் ஹில்ஸ் மற்றும் சோழவரம் ஏரிகளிருந்தும் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
மெட்ரோ ஏரிகளின் மொத்த நீர் இருப்பு 11,757 டிஎம்சி. இன்றைய நிலவரப்படி ஏரிகளில் 9, 733 நீர் இருப்பு உள்ளது. இதனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து மெட்ரோ ஏரிகளை கண்காணித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: மண்டல தொழில் நுட்பக்கல்வி செயற்பொறியாளரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: ரூ.21 லட்சம் பறிமுதல்!