சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ஆய்வு மேற்கொண்டார். பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது:
தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்துவருகிறது. 27 மாவட்டங்களில் நாளொன்றுக்கு 10 முதல் 15 நபர்களுக்கு குறைவாக பாதிப்புதான் இருக்கிறது. கரோனா பாதிப்பு குறைந்துவிட்டது என்று பொதுமக்கள் யாரும் முகக் கவசம் அணியாமல் அலட்சியம் காட்ட வேண்டாம். வெளியே வரும்போது கட்டாயம் முகக்கவசம் அணிந்துதான் வர வேண்டும். பூஜ்ஜியும் கரோனா தொற்று என்பதே எங்களது இலக்கு.
மேலும் தமிழ்நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. முன்களப் பணியாளர்களுக்கு பிப்ரவரி 1ஆம் தேதிமுதல் தமிழ்நாட்டில் தடுப்பூசி போடும் பணி தொடங்கும். முதியோர்களுக்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கைவைத்திருக்கிறோம்.
நாளை (ஜன. 31) 43 ஆயிரத்து 51 மையங்களில் போலியோ சொட்டுமருந்து முகாம் நடத்தப்பட உள்ளது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கட்டாயம் போட வேண்டும். கடந்த வருடங்களில் சொட்டு மருந்து குழந்தைக்கு போட்டுவிட்டோம் என்று இந்த வருடம் செல்லாமல் இருக்கக் கூடாது.
கரோனா தடுப்பூசி செலுத்தினால் பாதிப்புகள் ஏற்படுகிறது என்ற ஆதாரமற்ற செய்திகளை யாரும் நம்ப வேண்டாம். தடுப்பூசி போட்டுக்கொள்வதில் சுகாதாரப் பணியாளர்களுக்குத் தயக்கம் இருப்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் தடுப்பூசி போட்டுக்கொள்வோர் எண்ணிக்கை உயர்ந்துவருகிறது.
நமக்கு நோய் எதிர்ப்புச் சக்தி இருக்கிறது என்று தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருக்கக் கூடாது. கோவாக்சினைவிட கோவிஷீல்டு தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள சுகாதாரப் பணியாளர்கள் ஆர்வம்காட்டினர் என்பதை மறுக்க முடியாது.
கோவாக்சின் 3ஆம் கட்ட பரிசோதனையில் இருந்ததால் அதைப் போட்டுக்கொள்ள தயக்கம் இருந்தது. ஆனாலும் அமைச்சர் அதைப் போட்டுக்கொண்டார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'சுல்தான்' படத்தின் டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு!