சென்னை: தியாகராய நகரில் உள்ள கடைகளில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று (ஜூலை 12) கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அங்குள்ள கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறதா என்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் கடைகளில் பொதுமக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றி, முகக் கவசம் அணிகின்றனரா என்பதையும் பார்வையிட்டார்.
இந்நிகழ்வில் சென்னை மாநகராட்சி தியாகராய நகர் சுகாதார அலுவலர்கள் சீனிவாசன், பிரபு மற்றும் ரங்கநாதன் தெரு வியாபாரிகள் சங்கச் செயலாளர் சாகுல் ஹமீத் ஆகியோர் உடனிருந்தனர்.