சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “தமிழக அரசின் தீவர நடவடிக்கையால் கரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 49 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,372 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் 35, 036 மாதிரிகள் எடுக்கப்பட்டதில், 29,997 பேரிடம் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபர்களை விட சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இன்று ஒரே நாளில் 82 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் இருந்து 14 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் இறப்பு விகிதிம் 1.1% என்ற விகிதித்தில் தமிழகத்தில் உள்ளது. காரணம், 5,363 பேருக்கு ஒரே நாளில் பரிசோதனை செய்யக்கூடிய வசதிகள் தமிழகத்தில் உள்ளன.
இதனால், கரோனாவால் பாதிக்கப்படும் நபர்களை உடனே கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. இன்று கரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களில் சென்னையில் 7, திருப்பூரில் 28, கோவையில் 1, தஞ்சாவூரில் 1 என பதிவாகியுள்ளது. பாதிக்கப்பட்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருப்பதால் வேறு இடங்களுக்கு வைரஸ் பரவவில்லை.
ஏப்ரல் 2ஆம் தேதி ஐ.சி.எம்.ஆர் நிறுவனம் வழங்கிய ஒப்புதலின்படி 24 ஆயிரம் ரேபிட் கருவிகளும், தமிழக அரசு 10 ஆயிரம் கருவிகளையும் கொள்முதல் செய்துள்ளது. மேலும் தமிழகத்திற்கு 5 லட்சம் கருவிகளை வாங்க ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசு நிர்ணயித்த விலையில் தமிழக அரசு ரேபிட் கருவியை கொள்முதல் செய்துள்ளது. மாநில அரசு எந்த விலை நிர்ணயமும் இதில் செய்யவில்லை.
புதிதாக வாங்கப்படும் ரேபிட் கருவி கரோனா பாதிப்பு இருப்பதைத் தெரிவிக்காது. உடலில் பாதிப்பை ஏற்படுத்தும் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதா? என்பதைத் தெரிவிக்கும். இதையடுத்து கரோனா பரிசோதனை சம்பந்தப்பட்ட நபருக்கு செய்யப்படும்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறியும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன” என்று தெரிவித்தார்.