2011 முதல் 2015ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் வருவதாகக் கூறி 2 கோடியே 80 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்ததாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், செந்தில் பாலாஜி வீடு, அலுவலகங்களில் சோதனை செய்தனர். சென்னை மந்தைவெளியிலுள்ள அவரது வீடு சீல் வைக்கப்பட்டது. இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், அரசியல் விரோதம் காரணமாக தன் மீது பொய்யாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆதிகேசவலு முன் இன்று விசாரணைக்கு வத்தது. அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரபாகரன், இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில், செந்தில் பாலாஜியின் பெயர் இல்லை. புகார்தாரர்களும் அவரது பெயரைக் குறிப்பிடவில்லை. விதிகளை பின்பற்றாமல் அவரை கைது செய்ய காவல்துறையினர் முயற்சிப்பதாக குற்றம்சாட்டி வாதிட்டார்.
அரசு தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன், மேல் விசாரணையில் 238 பேர் பணம் கொடுத்து ஏமாந்திருப்பது தெரிய வந்துள்ளதாகவும், தற்போது அவர் தலைமறைவாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், ஜனவரி மாதம் 31ஆம் தேதி கரூரில் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொள்ள சென்ற அலுவலர்களை அவரது ஆதரவாளர்கள் தாக்கியதாகவும், அந்த ஆய்வின் முடிவில் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி செந்தில் பாலாஜிதான் என உறுதிப்படுத்தும் வகையில் பல ஆவணங்கள் கிடைத்துள்ளதாகவும் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் வாதிட்டார்.
இதையடுத்து, விசாரணைக்கு ஆஜராகும்படி செந்தில் பாலாஜிக்கு முறையாக நோட்டீஸ் அனுப்பும் நடைமுறையை பின்பற்ற அறிவுறுத்திய நீதிபதி, அதுவரை அவரை கைது செய்ய கூடாது என தெரிவித்தார். பின்னர் இந்த வழக்கின் விசாரணையை பிப் 7ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.