சென்னை காவல் துறையினருக்கு, கே.கே. நகர் அரசு மருத்துவமனை அருகே தனியார் பேருந்தில் கோடிக்கணக்கான பணம் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. இதனடிப்படையில் கே.கே. நகர் காவல் துறையினர், அரசு மருத்துவமனையையும், அதனைச் சுற்றியுள்ள பகுதியிலும் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது தனியார் ஆம்னி பேருந்தில் சந்தேகப்படும் படியாக பெரிய பெரிய சாக்கு மூட்டைகள் இறக்கி வைக்கப்பட்டது குறித்து காவல் துறையினர் விசாரணை செய்துள்ளனர். அதனையடுத்து, சாக்கு மூட்டைகளில் உள்ள அனைத்தும் பணம் என தெரிய வந்துள்ளது. அவை அனைத்துமே பத்து ரூபாய் நோட்டுகளாகவும், பத்து ரூபாய் நாணயங்களாகவும் மூட்டை மூட்டையாக இறக்கி வைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக காவல் துறையினர் நடத்திய விசாரணையில் 27 லட்சம் ரூபாய் பணம், கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து தனியார் சொகுசுப் பேருந்து மூலமாக சென்னைக்குக் கொண்டு வரப்பட்டது தெரிய வந்தது. மேலும் இதைக் கொண்டு வந்தவர் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஐயப்பன் என அறிய வந்தது.
ஊராட்சித் தலைவர் பதவிக்காக வங்கி மேலாளர் கொலை - ஏழு பேர் சிறையில் அடைப்பு!
இதில் சென்னையில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் மளிகைக் கடைகள் உள்ளிட்ட கடைகளுக்கு ஒரு லட்ச ரூபாய் அளவிற்கு சில்லறை நோட்டுகள் மற்றும் நாணயங்களை கொடுப்பதும்; அதற்கு உண்டான கமிஷனைப் பெற்றுகொள்வதும் தான் ஐயப்பனுடைய தொழில் என காவல் துறை விசாரணையில் தெரிவித்துள்ளார்.
ஐயப்பன் கொண்டு வந்துள்ள 27 லட்சம் ரூபாய் அதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால், கே.கே. நகர் காவல் துறையினர் அவற்றை வருமான வரித் துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.