சென்னை: ப்ரண்ட்ஸ் பட நடிகையான விஜயலட்சுமி 2020ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளரான சீமான் தன்னை ஏமாற்றிவிட்டதாகக் காணொலி ஒன்றை வெளியிட்டார்.
தற்கொலை முயற்சி
இந்தக் காணொலி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் சீமானுக்கு ஆதரவாகப் பனங்காட்டுப் படை கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஹரி நாடார், சதா ஆகியோர் விஜயலட்சுமியை மிரட்டும்விதமாக காணொலி வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த விஜயலட்சுமி தூக்க மாத்திரை சாப்பிட்டுத் தற்கொலைக்கு முயன்றார்.
ஹரி நாடார் மீது வழக்குப்பதிவு
முன்னதாக, கடன் வாங்கித் தருவதாகப் பணம் பெற்று மோசடி செய்ததாகத் தொடுக்கப்பட்ட வழக்கில் ஹரி நாடாரை பெங்களூரு பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கைதுசெய்திருந்தனர்.
பின்னர், இது குறித்து விஜயலட்சுமி அளித்த புகாரின்பேரில் சீமான், ஹரி நாடார், சதா ஆகியோர் மீது திருவான்மியூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவந்தனர்.
இந்நிலையில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹரி நாடாரைக் கைதுசெய்ய வேண்டும் என திருவான்மியூர் காவல் துறை பெங்களூரு நீதிமன்றம் மனு தாக்கல்செய்தது.
கைதானார் ஹரி நாடார்
இதையடுத்து திருவான்மியூர் காவல் துறை பெங்களூருவிற்கு விரைந்துசென்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹரி நாடாரைக் கைதுசெய்தனர்.
கைதுசெய்யப்பட்ட ஹரி நாடாரை சென்னைக்கு அழைத்துவரும் பணியில் ஈடுபட்டுவருவதாகவும், நாளை சைதாப்பேட்டை 18ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஹரி நாடாரை திருவான்மியூர் காவல் துறை ஆஜர்படுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.