சென்னை முகப்பேரை சேர்ந்த கல்லூரி மாணவர் ஆகாஷ் (19) கடந்த 2ஆம் தேதி, கிண்டி கத்திப்பாராவில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலுக்கு காரில் சென்றார். ஓட்டிலில் உள்ள மதுபான பாருக்கு சென்ற போது, அங்கிருந்த ஊழியர்கள் அவருக்கு வயது குறைவாக இருப்பதால் மது அருந்த அனுமதிக்க முடியாது எனக் கூறி உள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவர் ஊழியர்களுடன் தகராறில் ஈடுபட்டார். பின்னர் காரை எடுத்துக் கொண்டு வேகமாக கிளம்பினார். ஓட்டலின் கேட்டை உடைத்துக் கொண்டு கார் வெளியேறியதில், உடைந்த இரும்பு கேட் சக்கரத்தில் சிக்கியது. இதனால் நிலைதடுமாறிய கார் சாலையின் நடுவே சென்று நின்றது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பரங்கிமலை போலீசார், காரில் காயங்களுடன் இருந்த கல்லூரி மாணவர் ஆகாஷை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் இரும்பு கேட்டுடன் இருந்த காரை பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் அகற்றினர்.
இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், காரில் போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டியிருந்ததால், கல்லூரி மாணவரான ஆகாஷை கிண்டி போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கல்லூரி மாணவர் ஆகாஷ் வேகமாக காரை ஓட்டிச் சென்று, கேட்டை உடைத்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: 'என் காதலனுடன் பேசக்கூடாது' - சாலையில் சண்டை போட்ட கல்லூரி மாணவிகள்