சென்னை: சட்டம், வேளாண்மை, பொறியியல், கால்நடை, மீன்வளம் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்கள் சேர்க்கை குறித்தும், அதில் உள்ள பாதிப்புகளை நிவர்த்தி செய்வதற்கு டெல்லி உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் முதல் கூட்டம் தகவல் தொழில்நுட்ப கல்வி இயக்குனர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது, மருத்துவப் படிப்பை தவிர சட்டம், பொறியியல் ,வேளாண்மை, கால்நடை மீன்வளம் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்கள் சேர்க்கையில் உள்ள பாதிப்புகளை கண்டறிந்து அறிக்கை அளிக்க தமிழ்நாடு அரசு குழு அமைத்துள்ளது.
அரசுப்பள்ளி மாணவர்கள் தொழிற்படிப்புகளில் 2 முதல் 4 விழுக்காடு வரை சேர்கின்றனர். இதனை மாற்றி அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வி படிப்புகளில் தனி இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக முடிவெடுக்க ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வி படிப்புகளில் இட ஒதுக்கீடு வழங்குவதால் அவர்களின் சமூக பொருளாதாரம் மேம்படும்.
துறை வாரியான கோப்புகள் மற்றும் தரவுகளை அதிகாரிகளிடம் கேட்டிருக்கிறோம். இந்த அறிக்கை ஒரு வாரத்தில் கிடைக்கும். அதனடிப்படையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வி படிப்புகளில் எத்தனை சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்பதை ஆய்வு செய்து பரிந்துரையாக அளிக்க உள்ளோம். அரசு நிர்ணயித்த ஒரு மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க :மாணவர்கள் நீட் தேர்வுக்குத் தயாராக வேண்டிய சூழல்' - மா. சுப்பிரமணியன் விளக்கம்