கரோனா வைரஸ் தொற்றால் உலகமே முடக்கப்பட்ட நிலையில் தீவிர முயற்சிக்குப்பின் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு, பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு முதற்கட்டமாக ஒப்புதல் வழங்கப்பட்டது. இதையடுத்து, நாடு முழுவதும் ஜனவரி 16ஆம் தேதிமுதல் சுகாதாரத் துறை பணியாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுவருகின்றது.
ஆர்வம்காட்டாத தமிழ்நாடு
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் சுகாதாரத் துறைப் பணியாளர்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டாமல் உள்ளனர். இந்நிலையில் முன்களப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியுள்ளன.
தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்பும் சுகாதாரத் துறை பணியாளர்கள் கோவின் (COWIN) என்ற இணையதளத்தில் தங்களின் விவரங்களைப் பதிவுசெய்ய வேண்டும். அதன் அடிப்படையில் அவர்களுக்கு எந்த மையத்தில் தடுப்பூசி போடப்படும் என்ற விவரத்துடன் குறுந்தகவல் அனுப்பிவைக்கப்படும். அவர்கள் அந்த மையத்தில் குறிப்பிட்ட நேரத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள பொது சுகாதாரத் துறை ஏற்பாடுசெய்துள்ளது.
உதாரணமாக பிப்ரவரி 9ஆம் தேதி ஒருநாளில் கோவிஷீல்டு தடுப்பூசி போடுவதற்கு 625 மையங்களில் 37 ஆயிரத்து 800 சுகாதாரப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி போட ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. ஆனால் 7,317 சுகாதாரப் பணியாளர்கள் மட்டுமே தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
அதேபோல் 15 ஆயிரத்து 300 முன்களப் பணியாளர்கள் செலுத்திக்கொள்ள ஏற்பாடு செய்திருந்த நிலையில் 1,480 பேர் மட்டும்தான் செலுத்திக்கொண்டனர். காவல் துறையினரில் 9,500 பேருக்கு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த நிலையில் 1,612 பேர்தான் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். கோவாக்சின் தடுப்பூசிக்கான ஆறு மையங்களில் நேற்று 141 பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
தமிழ்நாட்டில் ஜனவரி 16ஆம் தேதிமுதல் பிப்ரவரி 9ஆம் தேதிவரை 1,039 முகாம்களில் ஏழு லட்சத்து 87 ஆயிரத்து 250 நபர்களுக்குப் போடுவதற்குத் தயார்செய்யப்பட்டிருந்தது. ஆனால் சுகாதாரத் துறை பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், காவல் துறையினர் என ஒரு லட்சத்து 85 ஆயிரத்து 299 நபர்கள் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.
பொது சுகாதாரத் துறை இயக்குநர் கடிதம்
இந்நிலையில் பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் துணை சுகாதார இயக்குநர்கள், சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை உயர் அலுவலர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "உலகில் உள்ள நாடுகளில் 21இல் மட்டுமே கரோனா வைரஸ் தடுப்பூசி போடப்படுகிறது. இந்தியாவில் இந்தத் தடுப்பூசி இலவசமாகப் போடப்படுகிறது.
மத்திய அரசு முதலில் சுகாதாரப் பணியாளர்களுக்கும், அதனைத்தொடர்ந்து முன்களப் பணியாளர்களுக்கும், பின்னர் 50 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் இணை நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளது. மத்திய அரசின் அறிவுரையின்படி தமிழ்நாட்டில் ஜனவரி 16 முதல் சுகாதாரத் துறை பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுவருகின்றது.
கோவின் செயலி
தமிழ்நாட்டில் 'கோவின் செயலி'யில் பதிவுசெய்த சுகாதாரத் துறை பணியாளர்களில் ஒரு லட்சத்து 74 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். மேலும் ஐந்து லட்சத்து 50 ஆயிரம் சுகாதாரத் துறை பணியாளர்கள் தடுப்பூசி போடுவதற்குப் பதிவுசெய்துள்ளனர்.
மத்திய அரசு சுகாதாரத் துறை பணியாளர்களுக்கு பிப்ரவரி 20ஆம் தேதிக்குள் முதல் தவணை தடுப்பூசி போட்டு முடிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. எனவே கோவின் இணையதளத்தில் பதிவுசெய்துள்ள சுகாதாரத் துறை பணியாளர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போட ஏற்பாடுசெய்ய வேண்டும்.
சுகாதாரத் துறை பணியாளர்களின் பெயர்கள் தொடங்கும் முதல் எழுத்தின் (அகர வரிசை) அடிப்படையில் பிப்ரவரி 11 முதல் 20ஆம் தேதிவரை போட வேண்டும்.
- பிப்ரவரி 11ஆம் தேதி ஏ, பி, சி,
- பிப்ரவரி 12ஆம் தேதி டி, இ, எஃப்
என்ற அடிப்படையில் தடுப்பூசி வழங்க வேண்டும். பிப்ரவரி 20ஆம் தேதிக்குள் தடுப்பூசி போட முடியாதவர்கள் 21, 22 ஆகிய தேதிகளில் மொத்தமாக தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
20ஆம் தேதிக்குள் தடுப்பூசி போடாத சுகாதாரத் துறை பணியாளர்களின் பெயர்கள் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பட்டியலில் சேர்க்கப்படும். அப்போது அவர்களுக்கு வரிசை, வயதின் அடிப்படையில் தடுப்பூசி போடப்படும். தடுப்பூசி போட்டுக்கொள்வதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் 104 என்ற எண்ணை தொடர்புகொண்டு தெளிவுபெறலாம்" எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ஆயுஸ் அமைச்சகத்திடம் திமுக எம்பி வில்சன் கேட்ட கேள்விகளும், கிடைத்த பதிலும்!