ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க வகை செய்யும் அவசர சட்டத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் தந்துள்ளார். அதுமட்டுமின்றி தடையை மீறி, இவ்விளையாட்டினை விளையாடுபவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதமும், 6 மாத சிறைத்தண்டனை வழங்கவும் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
இதுகுறித்து ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியாகியுள்ள செய்திக்குறிப்பில், ' 'ஆன்லைன் ரம்மி' போன்ற இணையவழி விளையாட்டுகளில் பணம் வைத்து ஈடுபடுவதன் மூலம் பொதுமக்கள் குறிப்பாக, இளைஞர்கள் தங்களது பணத்தையும் வாழ்க்கையையும் தொலைத்துவிடும் அவலத்தை தடுக்கும்விதமாக இந்த அரசு ஒரு அவசர சட்டத்தை இயற்றியுள்ளது.
இந்த அவசர சட்டம், கீழ்க்கண்ட நோக்கங்களுக்காக இயற்றப்பட்டுள்ளது.
1. இவ்விளையாட்டில் பணம் வைத்து ஈடுபடுவோரையும்; அதில் ஈடுபடுத்தப்படும் கணினிகள் மற்றும் அது தொடர்பான தடை செய்யவும், இச்சட்டம் உதவும்.
2. இத்தடையை மீறி, விளையாடுபவர்களுக்கு ரூ.5000 அபராதமும் ஆறுமாத சிறைத்தண்டனையும் வழங்க முடியும்.
3. ஆன்லைன் ரம்மி விளையாட்டு அரங்கம் வைத்திருப்போர்களுக்கு ரூ.10,000 அபராதமும் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கவும் முடியும்.
4. இவ்விளையாட்டில் பணப்பரிமாற்றங்களை இணைய வழி மூலம் மேற்கொள்வதைத் தடுக்க முடியும்.
5. இவ்விளையாட்டை நடத்தும் நிறுவனங்களின் பொறுப்பாளர்களின் மீது நடவடிக்கை எடுக்கவும், தண்டிக்கவும் இந்த அவசர சட்டம் வழி வகுக்கும் வகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் 'ஆன்லைன் ரம்மி' போன்ற இணையவழி விளையாட்டுகளை தடை செய்யும் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உயிர் குடிக்கும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு