சென்னை: கரோனா தொற்று இரண்டாவது அலையின் போது இறப்புகள் அதிக அளவில் இருந்தது. அப்பொழுது பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் இறந்ததால் குழந்தைகள் கல்வி பயில முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசு சமூக நலத்துறை மூலம் கல்வி கட்டணங்களை செலுத்தும் என அறிவித்திருந்தது.
இந்த நிலையில் 2022-23 ஆம் கல்வியாண்டில் தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்கள் கட்டணம் வசூல் குறித்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து சமூக நலத்துறை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமை ஆணையம் ஆகியவற்றின் வழிமுறைகளை சுட்டிக்காட்டி பள்ளிக்கல்வித்துறையின் இந்த உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தங்கள் மாவட்டங்களில் கரோனாவால் பெற்றோரை இழந்த மாணவர்களின் விவரங்களை கணக்கெடுக்க வேண்டும். அதை தொடர்ந்து அந்த மாணவர்கள் தாங்கள் ஏற்கனவே பயின்றுவரும் அந்த தனியார் பள்ளியிலேயே பயில்வதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், அந்த மாணவர்களின் விவரங்களை பெறும் கல்வித்துறை அந்த மாணவர்களின் பள்ளி கல்வி கட்டணத்தை அரசிடம் சமர்ப்பிக்கும். அதன்பிறகு மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் கரோனொ காலகட்டத்தில் தாய் மற்றும் தந்தையை இழந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் இடைநிற்றல் இல்லாமல் தாங்கள் பயின்ற தனியார் பள்ளிகளிலேயே கல்வி பயில வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஒரே சிரிஞ்ச் மூலம் 30 மாணவர்களுக்கு கரோனா தடுப்பூசி