கரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளதால், எங்கும் கூட்டம் கூடக் கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. அதேவேளையில் பள்ளிகளில் சான்றிதழ் வழங்கும் பணி உள்ளிட்டவற்றிற்காக, ஒரு மணி நேரத்திற்கு 20 மாணவர்கள் என அழைக்கப்பட்டு தகுந்த இடைவெளியுடன் சான்றிதழ்களை வழங்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் பாதுகாப்பு வழிமுறைகளை முழுமையாக கடைபிடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சூளைமேட்டில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இன்று (ஜூலை24), சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு அரிசி, பருப்பு வழங்கவும், 12 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பாடத்திட்டங்களை இலவச மடிக்கணினியில் பதிவேற்றம் செய்யவும், ஒரேநேரத்தில் 300க்கும் அதிகமான மாணவிகள் அழைக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் தகுந்த இடைவெளி இன்றி அமர வைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தகவலறிந்து பள்ளிக்கு விரைந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனிதா, இது குறித்து ஆசிரியைகளிடம் விசாரணை நடத்தினார். இந்நிகழ்வு தொடர்பாக, ஆசிரியைகள் தரப்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டதாக கூறப்பட்டாலும், வழக்குப்பதிவு செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், அதே பள்ளியில் ஆகஸ்ட் மூன்றாம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளதும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்து எவ்வித தகவலும் வெளியிடப்படாத நிலையில், பள்ளியின் தலைமையாசிரியர் வைத்துள்ள இந்த அறிவிப்பால் பெற்றோர் குழப்பம் அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: மக்களிடம் யாசகம் பெற்று அரசுக்கு நிதி கொடுத்த யாசகர் - பொதுமக்கள் பாராட்டு