தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்டமன்றப் பேரவை விதி எண் 110இன்கீழ் செப்டம்பர் 7ஆம் தேதியன்று ஏனையவற்றுக்கிடையே, சத்துணவு மையங்களில் பணிபுரியும் சத்துணவு சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் ஆகியோரின் ஓய்வுபெறும் வயது 58 லிருந்து 60ஆக உயர்த்தப்படும் என முதலமைச்சர் அறிவித்தார்.
இதனைச் செயல்படுத்தும்விதமாக, சத்துணவு மையங்களில் பணிபுரியும் சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் ஆகியோரின் ஓய்வுபெறும் வயது 58 லிருந்து 60ஆக உயர்த்தி ஏற்கனவே அரசாணை (நிலை) எண்: 63, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் (சந-4(2)) துறை நாள் 2021 அக்டோபர் 8இல் ஆணையிடப்பட்டுள்ளது.
மேற்கண்டுள்ள பணியாளர்கள் பயன்பெற்று வருவதைப் போன்று ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின்கீழ் உள்ள குழந்தைகள் மையங்களில் பணிபுரியும் அங்கன்வாடி உதவியாளர்கள் பயன்பெறும் வண்ணம், குழந்தைகள் மையங்களில் பணிபுரிந்துவரும் அங்கன்வாடி உதவியாளர்களின் வயது முதிர்வில் ஓய்வுபெறும் வயதினை (Retirement age on superannuation) 58 லிருந்து 60ஆக (Completion of 60 years) உயர்த்தி நேற்று (டிசம்பர் 2) ஆணை வெளியிடப்பட்டது.
இவ்வரசாணையினால் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின்கீழ் உள்ள குழந்தைகள் மையங்களில் பணிபுரியும் 40 ஆயிரத்து 601 அங்கன்வாடி உதவியாளர்கள் பயனடைவர். அவர்கள் ஊக்கமுடன் பணியாற்றி செம்மையான முறையில் இத்திட்டத்தினைச் செயல்படுத்திட இவ்வரசாணை வழிவகுக்கும்.
இதையும் படிங்க: சசிகலா மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் : ஜெயக்குமார்