தமிழ்நாட்டில் இதுவரை கலை அறிவியல் கல்லூரிகளில் காலை 8 முதல் மதியம் ஒரு மணி வரை ஒரு பிரிவும், மதியம் ஒரு மணி முதல் மாலை 6 மணி வரை ஒரு பிரிவும் என இரண்டு பிரிவுகளாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனால் கிராமப்புறங்களில் இருந்து கல்லூரிகளுக்கு முதல் பிரிவிற்கு வரும் மாணவர்கள் மிகுந்த சிரமப்பட்டனர். பெரும்பாலானோர் காலை உணவு உண்ணாமல் கல்லூரிக்கு வரும் நிலைமையும் இருந்து வந்தது.
இந்நிலையில், மாணவர்களின் இதுபோன்ற பிரச்னைகளை தீர்க்கும் வகையில், காலை, மாலை என இரு பிரிவுகளாக நடத்தப்பட்டு வந்த கல்லூரி வகுப்புகள், இனி ஒரு பிரிவாக நடத்தப்படும் என உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா வெளியிட்டுள்ள அரசாணையில், “ மாணவர்களின் கல்வியறிவு மற்றும் திறனை வளர்க்கும் வகையில் 2006 ஆம் ஆண்டிற்கு முன்னர் பின்பற்றப்பட்டு வந்த வகுப்பு நேர முறையினை, மீண்டும் பின்பற்றலாம் எனக் கல்லூரி கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, கல்லூரி மாணவர்களுக்கான வகுப்புகள் இனி காலை 9:30 மணிக்கு தொடங்கி மாலை 4.30 மணி வரை நடைபெறும். மதியம் 12.30 மணி முதல் 1.30 மணி வரை உணவு இடைவேளை வழங்கி அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த வகுப்பு நேரம் மாற்றம் 2020-21 ஆம் கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படும் “ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை!