ஆன்லைன் வகுப்பில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, சென்னை கே.கே.நகரில் உள்ள பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன், அசோக் நகர் அனைத்து மகளிர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து, சென்னை மாநகர காவல் ஆணையர், கடந்த ஆண்டு ஜூன் மாதம் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்து, தனது கணவரை விடுதலை செய்யக் கோரி, ராஜகோபாலனின் மனைவி சுதா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், கடந்த 2015ஆம் ஆண்டு நடந்த சம்பவம் தொடர்பாக அளித்த புகாரின் அடிப்படையில் தனது கணவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அப்போது ஆன்லைன் வகுப்புகள் ஏதும் நடைபெறவில்லை எனவும் கூறியுள்ளார்.
தாமதமாக அளிக்கப்பட்ட புகாரில், முழுமையாக உண்மையை கண்டறியாமல் செவி வழி தகவலின் அடிப்படையில் வழக்குப் பதியப்பட்டு உள்ளதாகவும், எந்த ஆதாரங்களும், அடிப்படையும் இல்லாமல் தனது கணவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளராகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் ஆர்.என்.மஞ்சுளா அடங்கிய அமர்வு, சம்பவம் நடைபெற்ற போது ஆன் லைன் வகுப்புகள் இல்லை என்பதை கருத்தில் கொள்ளாமல், குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளதாகவும், குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பதற்கான காரணங்களை, குறித்த காலத்தில் வழங்கவில்லை என்றும் கூறி, ராஜகோபாலனை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தது.
இதையும் படிங்க: ’பொங்கல் சிறப்பு பேருந்துகளால் 138 கோடி வருவாய்’ - அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன்