'இத்துணுண்டு பார்சல்ல இம்புட்டு தங்கமா? ஸ்வப்னாவுக்கும் தொடர்பா? - Swapna case and gold smuggling in Chennai
துபாயிலிருந்து வந்த இந்தியர்களில் நால்வர் சினிமா பாணியில் தங்கத்தைக் கடத்தி வந்து சிக்கலில் சிக்கியுள்ளனர். இவர்களின் கிளை ஸ்வப்னா தங்கக் கடத்தல் வழக்கு வரைக்கும் நீடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆட்டு மந்தையில் பதுங்கிய குள்ள நரிகளைப் போல் கமுக்கமாக, தங்கத்தைக் கடத்தி வந்த கடத்தல்காரர்களை காவல் துறையினர் எப்படி அடையாளம் கண்டனர். இந்தக் கட்டுரையில் காண்போம்.
துபாயில் சிக்கித்தவித்த இந்தியா்களில் 180 பேரை ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் சிறப்பு மீட்பு விமானம், இன்று(ஆகஸ்ட் 4) அதிகாலை 3.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்து வந்தது. அவர்கள் அனைவருக்கும் மருத்துவம், குடியுரிமை உள்ளிட்ட சோதனைகளை மேற்கொண்ட சுங்கத்துறை அலுவலர்கள் அவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதற்காக சிறப்பு பேருந்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
அப்போது, மேலக்கோட்டையூாில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட முகாமிற்கு 78 பேரை ஏற்றிக்கொண்டு 3 சிறப்பு தனிப் பேருந்துகள் புறப்படத் தயாரானது. இந்நிலையில் ஒரு பேருந்தின் அருகே மறைமுகமாக நின்ற ஆசாமி ஒருவர், பேருந்தில் இருந்த பயணியிடம் பணத்தைக் கொடுத்து விட்டு, அவாிடமிருந்து பாா்சலை வாங்கி, அவசர அவசரமாக தனது பேண்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்தாா்.
இதைப் பார்த்த விமான நிலைய காவல் துறையினர், ஆசாமியை அழைத்து, "எதற்காக பணம் கொடுத்தாய்? அவா் கொடுத்த பாா்சலில் என்ன இருக்கிறது?" என்று விசாரித்ததற்கு, "அவருக்கு செலவுக்குப் பணம் கொடுத்தேன். பாா்சலில் பழுதடைந்த கடிகாரம், மருந்து சீட்டுகள் தான் இருக்கின்றன" என்று பதிலளித்தார். ஆனாலும் சந்தேகமடைந்த காவல் துறையினர் பாா்சலைப் பிரித்து பரிசோதித்ததில், அதனுள் 4 சிறிய தங்கக் கட்டிகள் இருந்தன.
செல்போனை ஆன் செய்த மகள்; ஸ்வப்னாவை ஆஃப் செய்த என்ஐஏ!
அவை ஒவ்வொன்றும் கால் ( 1/4 ) கிலோ என மொத்தம் 1 கிலோ தங்கக் கட்டிகள் இருந்தன. அதன் மதிப்பு சுமாா் ரூ.52 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து அவரை கையும் களவுமாக பிடித்த காவல் துறையினர் தங்கத்தைப் பறிமுதல் செய்து, அவரை சுங்கத்துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தனா். சுங்கத்துறையினா் நடத்திய தீவிர விசாரணையில், சினிமா பாணியில் இன்னும் சுவாரஸ்யங்கள் அதிகமாகின.
மீட்பு விமானத்தில் வந்தவா்களில் 4 போ் தலா கால் கிலோ தங்கத்தை மறைத்து வைத்திருந்ததும் சுங்கச்சோதனைகள் முடிந்து வெளியே வந்ததும், அவா்களில் ஒருவா் மற்ற மூன்று பேரிடமிருந்த தங்கத்தை வாங்கி, தன்னிடமிருந்த தங்கத்தையும் சோ்த்து ஒரே பாா்சலாக்கி கொண்டு பேருந்தில் ஏறியுள்ளார். அதன்பின்பே பேருந்துக்குக் கீழே நின்ற ஆசாமியிடம் தங்கத்தைக் கொடுத்துள்ளாா் என்பதும் தெரியவந்தது.
கடத்தல் வழக்கில் திடீர் திருப்பம்; ஸ்வப்னாவுக்கு எப்படி அரசு வேலை கிடைத்தது?
இதையடுத்து மேலக்கோட்டையூா் விஐடி பல்கலைக்கழத்தில் உள்ள தனிமைப்படுத்துதல் முகாமிற்குச் சென்ற சுங்கத்துறை அலுவலர்கள் அங்கு தங்கியிருந்த, தங்கம் கடத்தி வந்த 4 பேரை விசாரணைக்காக சென்னை விமான நிலையம் அழைத்து வந்தனா். சுங்கத்துறையினா் நடத்திய விசாரணையில், துபாய் விமானநிலையத்தில் 2 ஆசாமிகள், அவா்களிடம் இந்த தங்கக்கட்டிகளை கொடுத்ததாகவும், பணத்திற்கு ஆசைப்பட்டு தங்கத்தை வாங்கிவந்ததாகவும் கூறினர். இதையடுத்து சுங்கத்துறையினா் 5 பேரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவா்கள் 5 பேரும் சென்னை, திருச்சி, சிவகங்கை பகுதிகளைச் சோ்ந்தவா்கள் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே சென்னை விமானநிலையத்தில் கடந்த 2019ஆம் ஆண்டிலிருந்து தங்கக் கடத்தல் அதிக அளவில் நடப்பதாகவும், இதற்கும் கேரள தங்கக் கடத்தல் ஸ்வப்னா சுரேஷ் கும்பலுக்கும் தொடா்பு உள்ளதா என்று தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தி வருகின்றனா்.
மேலும் ஸ்வப்னா கும்பல் இது வரை 400 கிலோ தங்கத்தை சென்னை விமான நிலையம் மூலமாக கடத்திச் சென்றது குறிப்பிடத்தக்கது.
இந்த நேரத்தில் மீட்பு விமானத்தில் துணிச்சலாக ரூ. 52 லட்சம் மதிப்புடைய ஒரு கிலோ தங்கக் கடத்தலில் ஈடுபட்டு சிக்கியுள்ள நபர்களிடமும் தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் விசாரணை நடத்துவாா்கள் என்று கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் சென்னை விமான நிலையத்தில் இன்று(ஆகஸ்ட் 4) பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.