சென்னை: பூந்தமல்லி நெடுஞ்சாலை ராமாபுரம் அருகே, மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், அங்கு கிரேன் மூலம் ராட்சத தூண்கள் நடும்பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று(செப்.27) அதிகாலை குன்றத்தூரில் இருந்து அரசு பேருந்து ஒன்று, போக்குவரத்து ஊழியர்களுடன் ஆலந்தூர் பணிமனை நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்து ராமாபுரம் அருகே சென்ற போது, கிரேன் மூலம் தூக்கப்பட்ட ராட்சத தூண் பேருந்து மற்றும் லாரி ஒன்றின் மீதும் விழுந்துள்ளது.
இதில், பேருந்து நடத்துனர் ஐயாதுரை(52), ஓட்டுனர் பூபாலன்(45), லாரி ஓட்டுநர் ரஞ்சித்குமார்(30), மற்றும் பேருந்தில் சென்ற 3 பேர் உட்பட மொத்தம் 6 பேர் காயமடைந்தனர். தூண் விழுந்ததில் பேருந்து, லாரி பலத்த சேதமடைந்தது.
தகவல் அறிந்து அங்கு சென்ற பாண்டிபஜார் போக்குவரத்து போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு, சிகிச்சைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இச்சம்பவம் குறித்து போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: அமைச்சர் சேகர்பாபுவின் சகோதரர் தற்கொலை!