சென்னை: பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி, மாநிலத் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள தமிழ்நாடு வந்தார்.
அவருக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பளித்தனர். பின்னர் அங்கிருந்து சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு அவர் வருகை தந்தார். அப்போது பாஜக மாநிலத் தலைவர் முருகன், பாஜக பெண்கள் அணி, தொண்டர்கள் உள்ளிட்டோர் கூட்டாக அவரை வரவேற்றனர்.
தொடர்ந்து, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு சி.டி.ரவி, எல்.முருகன் ஆகியோர் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், வி.பி.துரைசாமி, நடிகை குஷ்பூ உள்ளிட்ட பாஜக நிர்வாகிகளும், தொண்டர்களும் பங்கேற்றனர்.
தொடர்ந்து நிர்வாகிகள், பாஜக மாவட்டச் செயலர்கள் உள்ளிட்டோர் ரவிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் ரவி பேசும்போது, ”தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்தே தீரும்” என்றும், அதற்கு தன்னால் முடிந்த அளவு சிறப்பாகப் பணியாற்றுவேன் என்றும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், பொதுச் செயலாளராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக தான் சென்னை வந்துள்ளதாகவும், தமிழ்நாட்டில் பாஜகவை மேம்படுத்த தன்னால் முடிந்தவரை சிறப்பாக செயல்படுவேன் என்றும் தெரிவித்தார்.