சென்னை: "தேசிய முன் பருவ குழந்தைப் பராமரிப்பு மற்றும் கல்வி கொள்கை” குறித்த மறு ஆய்வு, தேசிய முன் பருவ குழந்தைப் பராமரிப்பு மற்றும் கல்வி எனும் அரசின் கொள்கை குறித்து மறு ஆய்வு, மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் துணைத் தலைவர் சி . பொன்னையன் தலைமையில் நடத்தப்பட்டது.
இணைய வழியாக நடத்தப்பட்ட இந்த ஆய்வுக் கூட்டத்தில், இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பினைக் கொண்டுள்ள ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் உயர் அலுவலர்களும், கல்வி, குழந்தை நலம் சார்ந்த துறை வல்லுநர்களும், இதர தொடர்புடைய துறைகளின் உயர் அலுவலர்களும் பங்கேற்று தங்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தெரிவித்தனர்.
மாநில வளர்ச்சி கொள்கைக் குழு துணை தலைவர் பொன்னையன் தனது நிறைவுரையில், “குழந்தைகள் நலன் மற்றும் அவர்களுக்கான கல்விச் சார்ந்த திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழ்நாடு பிற மாநிலங்களைக் காட்டிலும் வெகுவாக முன்னேற்றம் கண்டு, முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது.
மேலும், முன் பருவ குழந்தைப் பராமரிப்பு மற்றும் கல்விக் கொள்கையை நடைமுறைப்டுத்தவதில் தமிழ்நாடு சிறந்த முறையில் செயலாற்றி வருகிறது.
சமூகத்தில் நெடுங்காலமாக நிலவி வரும் பாலின பாகுபாட்டையும் ஆணாதிக்க மரபுகளையும் ஒழிப்பதன் மூலமும் ஊரக, நகர்ப்புற பகுதிகளில் குழந்தைக் காப்பகங்கள் அமைப்பதன் வாயிலாகவும் பெண்கள் வேலைக்கு செல்வதை அதிகரிக்க இயலும்” என்றார்.