ஆந்திராவிலிருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தப்படுவது தொடர்கதையாகி வருகிறது. உணவுப் பொருட்களை ஏற்றி வரும் வாகனம் மூலம் அண்மைக் காலமாக கஞ்சா அதிகம் கடத்தப்படுகிறது. குறிப்பாக கருணைக்கிழங்கு, எலுமிச்சம்பழம், கருவாடு என பொருட்களை ஏற்றிக்கொண்டு அதில் கஞ்சாவை மறைத்து கடத்துகின்றனர். அதன்படி விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னை வழியாக கேரளாவுக்கு கஞ்சா கடத்தப்படுவதாக போதைப்பொருள் நுண்ணறிவுப்பிரிவினருக்கு தகவல் வந்தது.
அதைத்தொடர்ந்து காவல்துறையினர் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மீஞ்சூர்-வண்டலூர் சாலையில் காலியான வாகனம் ஒன்று வந்துள்ளது. ஆனால், தார்ப்பாய்க்கு அடியில் கஞ்சாவை அவர்கள் மறைத்து வைத்து இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். சினிமா பாணியில் காலியான வாகனத்தில் யாருக்கும் சந்தேகம் ஏற்படாதவாறு கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்ததை காவலர்கள் கண்டுபிடித்ததை கண்டு கடத்தல்காரர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதனையடுத்து மறைத்து கடத்தப்பட்ட 205 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதனை கடத்திய கம்பத்தைச் சேர்ந்த சுதாகர் மற்றும் கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த சாகிப், சாம்ஸ்ரேர், அகிலேஷ் ஆகியோரை போதைப்பொருள் நுண்ணறிவுப்பிரிவினர் கைது செய்தனர். கஞ்சாவை கடத்தி வந்த வாகனத்தையும் அவர்கள் பறிமுதல் செய்தனர். ஆந்திராவில் இருந்து 5,000 ரூபாய்க்கு இரண்டு கிலோ கஞ்சாவை வாங்கிச்சென்று, கேரளாவில் 5 மடங்கு அதிகமாக விற்பனை செய்வதற்கு கடத்தியதாக கடத்தல்காரர்கள் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
மேலும், கேரளாவிலிருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிடிப்பட்ட சுதாகர் மீது ஏற்கனவே கஞ்சா கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் ஆலத்தூர் பகுதியில் கருவாட்டு வண்டியில் கடத்திவரப்பட்ட 300 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், மீண்டும் 200 கிலோ கஞ்சா பிடிபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சட்டவிரோதமாக குடியேறிய பாகிஸ்தானிக்கு 4 ஆண்டு சிறை