சென்னை: சென்னை ஆவடியை அடுத்த பட்டாபிராம், சோராஞ்சேரி சேர்ந்தவர் சரவணன் (46). கூலித் தொழிலாளியாக பணியாற்றும் இவருக்கும், இவரது மனைவி சத்தியவாணிக்கும் இரு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் சரவணன் தனது ஏழு நண்பர்களுடன் சுடுகாட்டுப் பகுதியில் சீட்டுக்கட்டு சூதாட்டம் விளையாடி உள்ளார். இதுகுறித்து பட்டாபிராம் காவல் துறையினருக்குக் கிடைத்த ரகசியத் தகவல் பேரில், சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் காவலர்கள் ரோந்து வாகனத்தில் சுடுகாட்டுப் பகுதிக்கு வந்துள்ளனர்.
கூவத்தில் மூழ்கினார்
காவலர்கள் வருவதைக் கண்டு பயந்து போன சரவணன், அவரது நண்பர்கள் அங்கிருந்து தப்பிக்க ஓடியுள்ளனர். இதில், சரவணன் மட்டும் சுடுகாடு அருகில் உள்ள கூவம் ஆற்றில் குதித்துள்ளார். ஆற்றில் உள்ள செடி கொடிகளில் சிக்கி அவர் தண்ணீரில் மூழ்கினார். இதனைப் பார்த்த அவரது நண்பர் ஜெகன் அங்கிருந்து ஓடி வந்து கிராமத்தில் உள்ள உறவினர்கள், பொதுமக்களிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, பொதுமக்கள் ஆவடி தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் கொடுக்க, தீயணைப்பு அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து படகு மூலம் ஆற்றில் இறங்கி சரவணனைத் தண்ணீரில் தேடும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்னர்.
ஐந்து மணிநேர மீட்புப்பணி
இந்நிலையில், ஐந்து மணி நேரப் போராட்டத்திற்குப் பின் சரவணன் சடலமாக மீட்கப்பட்டார். பின்னர், காவலர்கள் முருகனின் உடலை உடற்கூராய்வுக்காக எடுத்துச் செல்ல முயன்றபோது, அவரது உடலை உறவினர்கள், வீட்டிற்குக் கொண்டு சென்றனர். இதனால், உறவினர்களுக்கும் காவல் துறையினருக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு சரவணனின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: காவல் துறையினரிடம் இருந்து தப்பிக்க கூவம் ஆற்றில் குதித்த நபர் உயிரிழப்பு