தர்மபுரி மாவட்டம், சவுலுப்பட்டியை சேர்ந்த 101 வயதான வடிவேலு, விடுதலை போராட்டத்தின்போது வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டவர். அப்போது, அவர் கைதாகி கர்நாடக மாநிலம் பெல்லாரி அள்ளிபுரம் சிறையில் 7 மாதங்கள் சிறை தண்டனை அனுபவித்துள்ளார்.
இதன் மூலம் விடுதலை போராட்ட வீரருக்கான பென்ஷன் கேட்டு மத்திய அரசிடம் 1985ஆம் ஆண்டு அவர் விண்ணப்பித்தபோது, தாமதமாக விண்ணப்பித்ததாகக் கூறி, உள்துறை துணைச் செயலாளர் அந்த விண்ணப்பத்தை நிராகரித்துள்ளார். பின்னர் 1996இல் தமிழக அரசிடம் விண்ணப்பித்த வடிவேலு, உயர் நீதிமன்ற உத்தரவின்படி 2001 முதல் பென்ஷன் வாங்கி வருகிறார்.
இந்நிலையில், மத்திய அரசு ஓய்வூதியம் வழங்க மறுத்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் வடிவேலுவின் கோரிக்கையை 8 வாரத்தில் பரிசீலித்து முடிவெடிக்க உயர் நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது. ஆனால், அதனை செயல்படுத்தாமல் வேண்டுமென்றே உதாசீனப்படுவதாக மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வடிவேலு தொடர்ந்துள்ளார்.
அதில், மத்திய உள்துறை செயலாளர் அஜய்குமார் பல்லா, துணை செயலாளர் ரீனா மிர்ரா, பொதுத்துறை செயலாளர் சண்முகம், தர்மபுரி மாவட்ட ஆட்சியர் கார்த்திகா ஆகியோரை நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கோவிந்தராஜ், மத்திய மாநில அரசு அதிகாரிகள் ஜனவரி 29க்குள் இதுகுறித்து பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்தார்.
இதையும் படிங்க: விவசாயிகள் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டி முதியவர் தற்கொலை!