கரோனா வைரஸ் பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் வழங்கவும், மாற்றுத்திறனாளிகள் தங்கள் குறைகளை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்களை அறிவிக்கவும் அரசுக்கு உத்தரவிடக் கோரி, திருப்பூரை சேர்ந்த முருகானந்தம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் பி.டி.ஆஷா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் குறைகளை தெரிவிக்க 24 மணி நேரமும் இயங்கும் கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
உடனே, கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு தங்கள் அலைபேசி மூலமாக, நீதிபதிகள் இரண்டு முறை தொடர்பு கொண்டும் இணைப்புகள் கிடைக்கவில்லை. இதையடுத்து, மாற்றுத்திறனாளிகளுக்கான கட்டணமில்லா தொலைபேசி எண் செயல்படாமல் இருந்தால், அவர்களின் குறைகளை எப்படி அரசு கேட்க முடியும் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதை உடனடியாக சரி செய்ய அரசுக்கு அறிவுறுத்தினர். மேலும், இது குறித்து இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யவும் அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: ஆர்.எஸ்.பாரதி நீதிமன்றத்தில் ஆஜர்!