சென்னை: வியாசர்பாடி மல்லிப்பூ காலனி சி பிளாக் பகுதியைச் சேர்ந்தவர் ஜான்சன் (40). இவர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தபேதராக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த மாதம் 30ஆம் தேதி இரவு வீட்டைப் பூட்டிவிட்டு அதே பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். மீண்டும் மறுநாள் காலை வந்து பார்த்த போது வீட்டின் கதவு ஒரு பகுதி உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டினுள், பீரோவில் இருந்த 10 சவரன் தங்க நகை, கால் கிலோ வெள்ளி, ரூ. 5 ஆயிரம் பணம் மற்றும் வீட்டில் இருந்த பொருள்கள் திருடு போயிருந்தது.
நால்வர் கைது
இது குறித்து ஜான்சன் வியாசர்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று தடயங்களை கைப்பற்றி தொடர்ந்து விசாரணை செய்து வந்தனர்.
இந்நிலையில், ஒரு மாதமாக பல்வேறு இடங்களில் விசாரணை நடத்தி நேற்று வியாசர்பாடி மல்லிப்பூ காலனி பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்கின்ற குள்ள கண்ணா(22), ஜான்(43), வியாசர்பாடி நேரு நகர் பகுதியைச் சேர்ந்த அஜய் என்கின்ற கருவாடு(19), பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஆனந்தன்(38) ஆகிய நால்வரையும் கைது செய்தனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில், நால்வரும் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து கொண்டு பொருள்களை திருடி, வெவ்வேறு பகுதியில் அமைந்திருக்கும் அடகுக் கடைகளில் நகைகளை விற்றது தெரியவந்துள்ளது.
சிறையில் அடைத்தனர்
திருடிய பணத்தைக் கொண்டு பெங்களூரு சென்று செலவழித்துள்ளனர். பணம் செலவானது மீண்டும் சென்னைக்கு வந்துள்ளனர். கண்ணன் மீது காவல் துறையினருக்கு முன்னரே சந்தேகம் இருந்ததையடுத்து, அவரிடம் விசாரித்ததில் மற்ற மூவர் பற்றிய தகவல்களை காவல் துறையினர் அறிந்து கொண்டனர்.
கொள்ளையடிக்கப்பட்டதில் ஐந்து சவரன் தங்க நகை, கால் கிலோ வெள்ளி மற்றும் வீட்டில் இருந்த சில பொருள்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் பிடிபட்ட நால்வர் மீதும் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: Watch Video: இரவு நேரத்தில் திக் திக்.. குன்னூர் குடியிருப்பு பகுதியில் உலா வரும் சிறுத்தை!