நில அபகரிப்பு வழக்கில் நிபந்தனை ஜாமீன் பெற்றுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இரண்டு வாரங்களுக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி இரண்டாவது நாளாக இன்று (ஏப். 4) மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பு ஜெயக்குமார் கையெழுத்திட்டார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், "எல்லா துறைகளிலும் நிர்வாக சீர்கேடு உள்ளது. அந்த வகையிலேயே 12ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாத்தாள் வெளியாகி உள்ளது. திமுக ஆட்சிகாலத்தில் திமுகவினருக்கும், பொதுமக்களுக்கும் ஏன் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. திமுக நிர்வாகிகள் தவறு செய்தால் கடுமையாக நடவடிக்கைகள் எடுக்காமல் பெயரளவில் நடவடிக்கைகள் எடுக்கப்படுவருகின்றன.
திமுக கட்டுப்பாட்டில் தொண்டர்கள் இல்லை: திமுக தலைமை கழக கட்டுப்பாட்டில் கட்சி தொண்டர்கள் இல்லை. தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சீர்கேடு, விலைவாசி உயர்வு பிரச்சனைகள் நிலவிவருகிறது. இதன்காரணமாக இலங்கையை போன்று நம் நாட்டு பொதுமக்களும் போராட வேண்டிய நிலைமை உண்டாகும்.
அதிமுக போராட்டம்: சொத்துவரி உயர்வு காரணமாக நாளை அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்பட இருக்கிறது. சென்னையில் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலும், திருச்சியில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் போராட்டம் நடத்தப்படஉள்ளது. சொத்துவரி முழுமையாக ரத்து செய்யப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்துவிட்டு, தற்போது உயர்ந்திருக்கிறது.
அம்மா உணவகம், இலவச லேப்டாப் உள்ளிட்ட அதிமுக திட்டங்களை அழித்தது போல் தாலிக்கு தங்கம் திட்டத்தையும் திமுக அழித்துவருகிறது. இந்த திட்டம் மூலம் 14 லட்சம் பெண்கள் பயன்பெற்றனர்" என்றார். இதனிடையே தெலங்கான ஆளுநர் குறித்து நாஞ்சில் சம்பத் பேசியது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, குடிகாரனை பற்றி பேசமுடியாது என்று ஜெயக்குமார் கூறினார்.
இதையும் படிங்க: ஜெயக்குமார் மகள், மருமகனுக்கு முன்ஜாமீன்: நீதிமன்றம் உத்தரவு